இந்தியாவில் 8 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு! பலி 249
By Aruvi | Galatta | 12:15 PM
இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 6,761 லிருந்து 7618 ஆக அதிகரித்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 249 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு ஒரே அடியாக உயர்ந்து வருகிறது.
இதனால், இந்தியாவில் ஊரடங்கு நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து, மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனைக்குப் பின், இந்தியாவில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே, பஞ்சாப் மாநிலத்தில் மே 1 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து, அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு தற்போது நிகழ்ந்துள்ளது. புதுச்சேரி மாஹேவில் கொரோனா பாதிக்கப்பட்ட 71 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நோய்த்தொற்றினால் இழப்பு ஏற்பட்டால், நிவாரணமாக 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பாதிக்கப்படுவோருக்கு 2 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என்றும், அம்மாநில முதலமைச்சர் நாரயணசாமி அறிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 432 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 1574 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை அங்கு 110 பேர் பலியாகி உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்திலித்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 911 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்பேர்து வரை 9 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தின் பட்டியலில் டெல்லி 3 வது இடத்தில் இருக்கிறது. டெல்லியில் 903 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் பலியாகி உள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 249 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், இந்தியா முழுவதும் 7618 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலைக்குள் பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தைத் தாண்டும் என்றும் அஞ்சப்படுகிறது. அதே நேரத்தில், 649 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.