உலகை உலுக்கும் கொரனா! சீன பெருஞ்சுவருக்குள் 170 பேர் பலி..
By Aruvi | Galatta | 11:30 AM
சீனாவில் கொரனா வைரசுக்கு இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது.
சமீப காலமாக உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக கொரனா வைரஸ் திகழ்கிறது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு உருவாகிய கொரனா வைரஸ், அங்கு நாடு முழுவதும் பரவி வருகிறது.
இதனால், சீனாவில் மட்டும் கொரனா வைரசுக்கு இதுவரை 170 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.அதேபோல், சீனாவில் 7 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்டோர், இந்த வைரஸ்சால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் கிட்டதட்ட 300 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக, இந்த நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த வைரஸ் தாக்கியவர்கள் ஒருவித நிமோனியா காய்ச்சலுக்கு உள்ளாகி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பின்னர் உயிரிழப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, கொரனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படுவார்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், ஒரே நேரத்தில் ஆயிரம் பேருக்கு மேல் தங்கி சிகிச்சை பெறும் வசதிகளுடன், அங்கு அவசர அவசரமாக மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
நோய் தாக்கம் காரணமாக, சீனாவில் பொதுமக்கள் வெளியே நடமாடாமல், பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். இதனால், சீனாவில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி உள்ளது. சாலைகள் எல்லாம் வெறிச்சோடி காணப்படுகின்றன.
கொரனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் ஒரு வாரத்தில் பல மடங்கு அதிகரிக்கக் கூடும் என, சீனாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
மேலும், அமெரிக்கா உள்ளிட்ட சுமார் 18 நாடுகளுக்கு கொரனா வைரஸ் பரவி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், பல்வேறு நாடுகளின் விமான நிலையங்களில் மருத்துவ சோதனை முகாம்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, கொரனா வைரஸ் குறித்த அச்சம் உலக நாடுகள் முழுவதும் பரவி உள்ளது.
அத்துடன், நோய் தாக்கம் காரணமாக, சீனாவுக்கான விமான சேவைகளை, பல நிறுவனங்கள் நிறுத்தி உள்ளன. இதனால், சீனா செல்லவேண்டிய பயணிகளும், அங்கிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டிய பயணிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சீனாவில் கொரனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கொரனா வைரஸ்சால் பாதிக்கப்பட்டு சீனாவில் இருந்து, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்த இளைஞர் ஸ்ரீமனை மீட்க இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அவர், இன்று அல்லது நாளை நாடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா திரும்பும் அவர், மருத்துவமனையில் தனியாக அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே, சீன பெருஞ்சுவரைத் தாண்டிய உலகின் 18 நாடுகளுக்கு இந்த பெரும் நோய், பரவி வருவது இந்திய மக்களையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
கொரனா வைரஸ் தாக்குதலுக்கு, இந்தியாவில் தடுப்புக் கேடயமாக இருக்கப்போவது எது என்ற கேள்வியும், இந்திய மருத்துவர்களிடையே எழுந்துள்ளது. இதனால், கொரனா வைரஸை இந்தியா எப்படி எதிர்கொள்ளும்? சமாளிக்கும்? என்ற மிகப் பெரும் கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.