உலக அளவில் கொரோனாவுக்கு 24 லட்சம் பேர் பாதிப்பு! பலி 1.65 லட்சத்தைத் தாண்டியது
By Aruvi | Galatta | Apr 20, 2020, 12:44 pm
உலக அளவில் கொரோனாவுக்கு 24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 1.65 லட்சத்தை கடந்துள்ளது.
சீனாவின் ஒரு முனையிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா என்னும் கொடிய வைரஸ், உலகின் மறுகோடி வரை வேகமாகப் பரவி வருகிறது. இதனால், உலகின் சுமார் 204 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகிலேயே, கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா திகழ்கிறது. அமெரிக்காவில், இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 40,555 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், அமெரிக்காவில் மட்டும் இதுவரை 7 லட்சத்து 64 ஆயிரம் பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதை நிறுத்த நேரிடும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 600 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.
ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 198,674 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,453 ஆக அதிகரித்துள்ளது.
இத்தாலியில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 75 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அங்கு உயிரிழப்பு 20 அயிரத்தைக் கடந்துள்ளது.
ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பிரான்சிலும் உயிரிழப்பு 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
குறிப்பாக, ஐரோப்பிய கண்டத்தில் மட்டும் இதுவரை கொரோனாவுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தோன்றியதாகக் கூறப்படும் சீனாவில், கொரோனாவுக்கு இதுவரை 4600 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில், மேலும் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 295 ஆக உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக உலக அளவில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,65 லட்சத்தைத் தாண்டி உள்ளது. அதேபோல், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்தைத் தாண்டி உள்ளது.