கொரோனா தொற்று சென்னையின் நிலை என்ன தெரியுமா? 910 பேர் பாதிப்பு..
By Aruvi | Galatta | May 01, 2020, 10:45 am
கொரோனா வைரஸ் தொற்றால் சென்னையில் இதுவரை 910 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையின் நிலை குறித்து தற்போது பார்க்கலாம்.
இன்று மட்டும் சென்னையில் புதிதாக 7 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் மொத்தம் 29 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 24 பேசைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ர் சிகிச்
சென்னையில் கொரோனாவால் பலியான மருத்துவர் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 14 பேர் மீது, குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சென்னையில் இதுவரை இல்லாத வகையில், நேற்று ஒரே நாளில் 138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், சென்னை மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.
சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 11 குழந்தைகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை கோயம்பேட்டில் ஒரே நாளில் 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கோயம்பேட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று அதிகபட்சமாகத் திரு.வி.க. நகர் மண்டலத்தில் 41 பேரும், கோடம்பாக்கத்தில் 34 பேரும், தேனாம்பேட்டையில் 20 பேரும், அண்ணா நகரில் 13 பேரும், ராயபுரம் மற்றும் வளசரவாக்கத்தில் தலா 10 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், சென்னையில் இதுவரை மொத்தம் 910 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில், கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 216 ஆக உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில், சென்னையில் ஆபத்தான 6 மண்டலங்களில் ஒன்றாகத் திகழும் தண்டையார்பேட்டை மண்டலத்தில், நேற்று ஒரு தொற்று கூட இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் ராயபுரத்தை மிஞ்சியது, திரு.வி.க.நகர். சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாகத் திரு.வி.க நகரில் 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் 199 பேர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், தேனாம்பேட்டையில் 105 பேரும், கோடம்பாக்கத்தில் 97 பேரும், அண்ணாநகரில் 86 பேரும், தடையார்ப்பேட்டையில் 77 பேரும், வளசரவாக்கத்தில் 40 பேரும், அம்பத்தூரில் 27 பேரும், அடையாறில் 20 பேரும், திருவொற்றியூரில் 16 பேரும், ஆலந்தூரில் 9 பேரும், பெருங்குடியில் 9 பேரும், மாதவரத்தில் 4 பேரும், சோழிங்கநல்லூரில் 3 பேரும், மணலியில் 2 பேரும் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, சென்னையில் ஆண்கள் 63.94 சதவீதம் பேரும், பெண்கள் 36.09 சதவீதம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், 30 வயது முதல் 39 வயது வரை உள்ள நபர்கள் 205 பேரும், 20 வயது முதல் 29 வயது வரை உள்ளவர்கள் 196 பேரும், கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.