கொரோனாவால் திக்குமுக்காடும் சென்னை மாநகரம்! 1,729 பேர் பாதிப்பு..
By Aruvi | Galatta | May 05, 2020, 11:53 am
சென்னையில் நேற்று ஒரே நாளில் 266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், சென்னை மாநகரமே திக்குமுக்காடி வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.
சென்னையில் காவலர் பயிற்சி பள்ளியில், 8 பெண் பயிற்சி காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் 56 வயது நபர், கொரோனா வைரசால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சென்னையில் மெல்ல எட்டிப்பார்த்த கொரோனா வைரஸ், கடந்த ஒரு வார காலகமாக, சற்ற அதிகரித்து காணப்பட்டது. இதனையடுத்து, நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், சென்னை மக்கள் அனைவரும் கடும் பீதியடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், மற்ற பகுதிகளைக் காட்டிலும் கோடம்பாக்கத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை அங்கு 250 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 58 பேருக்கும், தேனாம்பேட்டையில் 40 பேருக்கும், திரு.வி.க.நகரில் 33 பேருக்கும், ராயபுரத்தில் 24 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னையில் அதிகபட்சமாக திரு.வி.க.நகர் மண்டலத்தில் 357 பேரும், ராயபுரம் மண்டலத்தில் 299 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 257 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், தேனாம்பேட்டையில் 206 பேரும், அண்ணாநகரில் 144 பேரும், தண்டையார்பேட்டையில் 136 பேரும், வளசரவாக்கம் பகுதியில் 114 பேரும், அம்பத்தூரில் 67 பேரும், அடையாறு பகுதியில் 44 பேரும், திருவொற்றியூரில் 29 பேரும், மாதவரம் பகுதியில் 24 பேரும், பெருங்குடியில் 12 பேரும், ஆலந்தூரில் 10 பேரும், மணலியில் மற்றும் சோழிங்கநல்லூரில் தலா 10 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் சென்னையில் இதுவரை 1,729 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 பேர் வரை கொரோனாவுக்க உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில், இதுவரை 264 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றால், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களில் 62.19 சதவீதம் பேர் ஆண்கள் என்றும், 37.75 சதவீதம் பேர் பெண்களும் என்றும், திருநங்கை ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த கொரோனா எண்ணிக்கையில், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 45.93 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால், டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படாது என்று, தற்போது தமிழக அரசு தெரிவித்துள்ளது.