சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 25 பேர் பலி!
By Aruvi | Galatta | Jul 10, 2020, 12:23 pm
சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 25 பேர் உயிரிழந்த சம்பவம், சென்னை வாழ் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா என்னும் பெருந்தொற்று வைரஸ், கடந்த சில நாட்களாக சென்னையில் குறைந்து காணபட்டது. ஆனால், நேற்றைய தினம் சென்னையில் மீண்டும் அதிகரித்துக் காணப்பட்டது. அத்துடன், கடந்த ஒரு வார காலமாகவே சென்னையில் கொரோனாவுக்கு ஏற்படும் உயிரிழப்புகள் சற்றும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை சென்னையில் இதுவரை 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 8 பேர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதே போல், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 4 பேர் கொரேனாவுக்க சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவர்களும் உயிரிழந்துள்ளனர். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேரும், கே.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரும், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேலும், சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர், இன்று காலை சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவுக்கு இன்று சென்னையில் மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் தற்போது 20,271 பேர் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாக, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அத்துடன், சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை தற்போது 73,728 ஆக உள்ளது என்று, சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று 4231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், 65 பேர் உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று சென்னையில் மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளதால், சென்னை வாழ் மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.
சென்னையில் தற்போது அதிக பட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2553 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதே போல், மதுரையில் இன்று புதிதாக 210 பேருக்கு கொரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மதுரை மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5509 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேர் ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் இன்று மேலும் 130 பேருக்கு கொரோனா உறுதியானதால், அந்த மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1,503 ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 535 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், வேலூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,640 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இது வரை 994 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மேலும், “தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் ஏற்பட்ட கொரோனா தொற்று எண்ணிக்கை மட்டும் 90 சதவிகிதம்” என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவின் மொத்த தொற்றில் 90 சதவிகிதம் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அத்துடன், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 6 மாநிலங்களில் மொத்த கொரோனா இறப்பு 86 சதவிகிதம் என்றும், மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது.
இதனிடையே, தமிழகம் முழுவதும் ஊரடங்கு விதிமீறியதாக 17.66 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், ஊரடங்கு விதிகளை மீறியதாக 7,58,944 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 6,27,902 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 8,32,680 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.