கொரோனா வைரஸ்.. உள்ளூர் முதல் உலகம் வரை 32.20 லட்சம் பேர் பாதிப்பு..!
By Aruvi | Galatta | Apr 30, 2020, 04:15 pm
கொரோனாவால் சென்னையில் 768 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அளவில் 33 ஆயிரம் பேரும், உலக அளவில் 32 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் 98 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 768 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னை ஏழு கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 8 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை கே.கே.நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வேலைக்கு சென்று திரும்பிய 35 பேர் விழுப்புரம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பாதிராப்புலியூர், கொரளூர், தென்ஆலப்பாக்கத்தை சேர்ந்த 35 பேரை தனிமைப்படுத்தி, சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் களப் பணியாற்றி வந்த காவலர் உட்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,162 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப http://nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,338 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,082 ஆக உயர்ந்துள்ள நிலையில், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,325 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டியது. அந்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரசுக்கு 2,502 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேபோல், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32.20 லட்சத்தை தாண்டியது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,28,194 ஆக அதிகரித்துள்ள நிலையில், கொரோனா வைரசிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,00,101 ஆக உயர்ந்துள்ளது.