கொரோனா அறிகுறி இருக்கும் வீடுகள்.. பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் என்ன தெரியுமா?
By Aruvi | Galatta | Jun 13, 2020, 10:45 am
கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்கள் வீட்டிலிருந்தால், அவர்களைப் பராமரிப்பவர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ், தமிழகத்தின் பிற பகுதிகளைக் காட்டிலும், தலைநகர் சென்னையில் அதிக அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக, சென்னையில் உள்ள மருத்துவமனைகள் யாருவம் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. அத்துடன், கொரோனா அறிகுறி இருப்போர் பெரும்பாலும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுப்பதைக் காட்டிலும், வீட்டில் தனிமையிலிருந்தே சிகிச்சை எடுத்துக்கொள்ள விரும்புகின்றனர்.
இது குறித்து ஆலோசனை நடத்திய சென்னை மாநகராட்சி, கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்கள் வீட்டிலிருந்தால், அவர்களைப் பராமரிப்பவர்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி,
- நோய்வாய்ப்பட்டவரோடு ஒரே அறையில் இருக்கும்போது, கண்டிப்பாக இருவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.
- நோயாளி மற்றும் வீட்டில் உள்ள அனைவரும் பயன்படுத்தும் முகக்கவசத்தை பாதுகாப்பான முறையில் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
- நோய்வாய்ப்பட்டவர்கள் அதிக நீர் ஆகாரம் எடுத்துக்கொள்வதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
- கீரை உள்ளிட்ட சத்தான உணவுகளை மட்டுமே சாப்பிடுவதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
- நோய்வாய்ப்பட்டவர்களுக்குச் சேவை செய்வோர் அடிக்கடி கைகளைச் சோப்பு அல்லது சானிடைசர் போட்டு கழுவ வேண்டும்.
- சமைக்கும் முன்பும், சமைத்த பின்பும், சாப்பிடும் முன்பும், சாப்பிட்ட பின்பும், கழிப்பறை பயன்படுத்தும் முன்பும், அதன் பின்பும் கண்டிப்பாக கைகளை சோப்பு அல்லது சானிடைசர் போட்டுக் கழுவ வேண்டும்.
- நோய்வாய்ப்பட்டவர்களுக்கு என்று தனி பாத்திரம், தணியாகத் துணி, படுக்கை உள்ளிட்டவற்றை ஒதுக்கித் தரவேண்டும்.
- நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அடிக்கடி மூச்சு திணறல் உள்ளிட்ட வேறு பிரச்சனைகள் இருந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும், சென்னை மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது.