இந்தியாவைப் பற்றி உலகமே பேசுகிறது! பிரதமர் மோடி பெருமிதம்
By Aruvi | Galatta | Apr 24, 2020, 01:50 pm
இந்தியா, கொரோனாவை எப்படிக் கட்டுப்படுத்துகிறது என்பதைப் பற்றி உலகமே பேசுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.
உலகத்தையே காட்டம் காண வைத்துள்ள கொரோனா என்னும் கொடிய வைரஸ், மற்ற உலக நாடுகளை ஒப்பிடுகையில், அதன் தாக்கம் இந்தியாவில் சற்று குறைவுதான்.
மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவில், கொரோனாவை எப்படிக் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது, சமூக இடைவெளி எப்படிப் பின்பற்றப்பட்டு வருகிறது என்று உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ள.
இது தொடர்பாக, இந்திய பஞ்சாயத்துத் தலைவர்களிடம், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று கலந்துரையாடினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, “கொரோனா தொற்று பரவல், அனைவருக்குமான படிப்பினையாக அமைந்துள்ளதாக” குறிப்பிட்டார்.
அத்துடன், “இது பல புதிய படிப்பினைகளை ஏற்படுத்தியிருக்கிறது என்றும்” பிரதமர் மோடி கூறினார்.
மேலும், “கொரோனா தொற்று பரவலானது, நம் அனைவரும் வேலை செய்யும் முறையையே முழுவதுமாக மாற்றி விட்டது என்றும், இந்த பேரிடர் நாம் இதுவரை சந்தித்திராத பல புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது” என்றும் மோடி சுட்டிக்காட்டினார்.
“அதே நேரத்தில், அதன் மூலம் நாம் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளோம்” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
குறிப்பாக, “மக்கள் தொகை அதிகம் நிறைந்த இந்தியா, சமூக இடைவெளியைப் பின்பற்றி எப்படி கொரோனாவை கட்டுப்படுத்துகிறது என்பதை உலகமே உற்று நோக்குகிறது” என்றும், ஒட்டுமொத்த இந்திய மக்களின் ஆதரவால், நாம் கொரோனாவை எப்படிக் கட்டுப்படுத்தி வருகிறோம் என்பதை உலகமே பேசிக் கொண்டிருக்கிறது” என்று, பிரதமர் மோடி பெருமையோடு நினைவு கூர்ந்தார்.