ஊரடங்கு.. எத்தனை நாடுகளில் எத்தனை நாட்கள் தெரியுமா?
By Aruvi | Galatta | 12:11 PM
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பல நாடுகள், தொடர்ந்து ஊரடங்கை நீடித்து வருகின்றன.
உலகமே, கொரோனா என்னும் உயிர்க்கொல்லி நோயின் பிடியிலிருந்து சிக்காமல் இருக்க, வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளது. இதனால், சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த 300 கோடி மக்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் இந்தியா உட்பட 300 கோடி மக்களும், தங்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளுக்காக மட்டுமே, வீட்டை விட்டு கடைகளுக்கு வருகிறார்கள். மற்றபடி, யாரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.
அதன்படி, இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை, 21 நாட்களுக்கு தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. இதுஇன்னமும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் உருவானதாகக் கூறப்படும் சீனாவில், கடந்த ஜனவரி 23 ஆம் தேதி முதல், கடந்த வாரம் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 76 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலிலிருந்தது.
அதேபோல், உலகிலேயே கொரோனா வைரஸ் தாக்கத்தில் முதல் இடத்தில் இருக்கும் உலக வல்லரசான அமெரிக்காவில், முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல், வரும் 29 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில், கொரோனா தாக்கம் அதிகம் உள்ள நாடாகத் திகழும் ஸ்பெயின் நாட்டில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல், வரும் 11 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இத்தாலியில் கடந்த மார்ச் 9 ஆம் தேதி முதல், வரும் 13 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டில், கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி முதல், வரும் 15 ஆம் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கும், ஊரடங்கு காலம் மேலும் நீட்டிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஜெர்மனியில் கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல், வரும் 19 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அங்கும் ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இங்கிலாந்தில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல், வரும் 13 ஆம் தேதி வரை ஊரடங்கு காலம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் நீட்டிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெல்ஜியம் நாட்டில் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி முதல் வரும் 19 ஆம் தேதி வரை ஊரடங்கு காலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல், அடுத்த மாதம் மே 4 ஆம் தேதி வரை ஊரடங்கு காலம் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.