தலைமைச் செயலகத்தைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களும் மூடல்!
By Aruvi | Galatta | Jun 13, 2020, 10:14 am
சென்னையில் தலைமைச் செயலகத்தைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளது.
சென்னையில் மையம் கொண்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று, சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் அதிதீவிரமாகப் பரவி வருகிறது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, சென்னை தலைமைச் செயலகத்திலும் கொரோனா தொற்று ஊருடுவியது. தலைமைச் செயலகத்திலும் கடந்த 8 ஆம் தேதி நிலவரப்படி 44 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, அந்த 44 பேர்களுடன் தொடர்பிலிருந்த அந்த அலுவலக ஊழியர்கள் சுமார் 250 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 138 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருப்பதாகத் தகவல் வெளியானது. இதனையடுத்து, அவர்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து அலுவலகங்களும் இன்றும், நாளையும் மூடப்படுகிறது.
மேலும், அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற உள்ளது. இதற்காகவே, தலைமைச் செயலகம் 2 நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தலைமைச் செயலகத்தைத் தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. கிருமி நாசினி தெளித்து வளாகத்தைச் சுத்தப்படுத்தும் பணிக்காக அனைத்து அலுவலகங்களும் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் அடிப்படையில், கடந்த 10 ஆம் தேதி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை ஒன்றைப் பிறப்பித்தது. அதில், “ஒவ்வொரு அரசு அலுவலகங்களும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முழு அளவில் மேற்கொள்வதற்காக இரண்டாம் சனிக்கிழமைகளில் மூடப்பட வேண்டும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் சுத்திகரிப்புப் பணி நடத்தப்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, “கொரோனா தொற்று தடுப்புக்கு சில நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையில், தலைமைச் செயலகத்தில் சமூக இடைவெளிக்கு வழிவகுக்கும் வகையில், 50 சதவீத பணியாளரின் எண்ணிக்கையை 33 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்றும், தலைமைச் செயலகத்தில் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தப் பணி மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றும், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.