6 லட்சத்தை நெருங்கும் கொரோ பாதிப்பு.. பலி எண்ணிக்கை 27,000 ஆக உயர்வு!
By Aruvi | Galatta | 01:23 PM
உலகம் முழுவதும் 6 லட்சத்தை நெருங்கும் கொரோ பாதிப்பால், பலி எண்ணிக்கை 27 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த 3 மாதாக அனைவரும் உச்சரிக்கும் ஒரு வார்த்தை கொரோனா. அந்த கொரோனா வைரஸ் தான், இன்று உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளுக்கு வேகமாகப் பரவி வருகிறது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், சீனாவைக் காட்டிலும் இத்தாலி, ஸ்பெயின், ஈரான் உள்ளிட்ட நாடுகளைக் குறிவைத்து கடுமையாகத் தாக்கி வருகிறது.
அதேபோல் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகளையும் விட்டு வைக்காமல் கடுமையாகத் தாக்கி வருகிறது. கொரோனாவின் கோரா தாண்டவத்திற்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.
மேலும், கொரோனாவிற்கு இன்னும் மருந்து கண்டு பிடிக்க முடியாமல் தற்காப்பு நடவடிக்கையாக, பல உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன.
இதனால், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வருகிறது. உலகளவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 3 ஆயிரத்து 182 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் இதுவரை 81 ஆயிரத்து 394 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் இது வரை 3 ஆயிரத்து 295 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 17,133 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரமாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் மட்டும் 400 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனால், அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது ஆயிரத்து 695 ஆக உயர்ந்துள்ளது.
இத்தாலியில் நேற்று ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 919 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனால், அங்குப் பலி எண்ணிக்கை 9 ஆயிரத்து 134 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை, இத்தாலியில் 86 ஆயிரத்து 498 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது
ஸ்பெயின் நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 773 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அந்நாட்டில் பலி எண்ணிக்கை 5 அயிரத்து 138 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் 65,719 பேர் கொரோனா தொற்றால் தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் 32 ஆயிரத்து 964 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் தற்போது வரை ஆயிரத்து 995 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரானில் 32 ஆயிரத்து 332 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை அந்நாட்டில் 2 ஆயிரத்து 378 ஆக அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது.
தற்போதைய நிலவரப்படி, உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை தற்போது நெருங்கி உள்ளது. அதேபோல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சுமார் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 355 பேர் மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.