கொரோனா பாதிப்பு.. 2 ஆம் கட்டத்தில் தமிழகம்! 50 பேர் பாதிப்பு..
By Aruvi | Galatta | 10:37 AM
கொரோனா பாதிப்பில் தமிழகம் 2 ஆம் கட்டத்தில் உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மெல்ல பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, நேற்று ஒரே நாளில் 8 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 50 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாகப் பாதிக்கப்பட்ட 8 பேரில், 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த குறிப்பிட்ட 8 பேரும் ஏற்கனவே ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வரும் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்களுடன் பழகியவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
அதேபோல், தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் தற்போது 43 ஆயிரத்து 538 பேர் உள்ளனர். இதில், ஆயிரத்து 763 பேருக்கு ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவில், ஆயிரத்து 666 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தற்போது தெரியவந்துள்ளது. மேலும், 89 பேருக்குப் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சென்னையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. திருப்பூரில் 27 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கும், சேலத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும், மதுரையில் 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் சளி, மூச்சுத் திணறல், காய்ச்சல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி உள்ளவர்கள் அனைவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழகத்தில் 295 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்றும், தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் 11 மாவட்டங்களில் கட்டுப்படுத்தும் திட்டம் முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “ கொரோனா பாதிப்பில் தமிழகம் 2 ஆம் கட்டத்தில் உள்ளதாக” குறிப்பிட்டார்.
“கொரோனா பாதிப்பில் தமிழகம் 3 ஆம் கட்டத்திற்குச் செல்லாமல் இருக்க, தமிழக அரசு முழுவீச்சுடன் இயங்குகிறது என்றும், தயவுசெய்து பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.