சென்னையில் இன்று கொரோனாவுக்கு 18 பேர் பலி..
By Aruvi | Galatta | Jul 09, 2020, 01:44 pm
சென்னையில் கொரோனாவுக்கு நேற்று இரவு முதல் தற்போது வரை 18 பேர் உயிர் இழந்து உள்ளனர்.
கொரோனா என்னும் கொடிய வைரஸ், தமிழகத்தைப் பொருத்த வரை, சென்னையில் மையம் கொண்டு, பல தரப்பு மக்களையும் கடுமையாகத் தாக்கி வருகிறது.
கடந்த வாரம் சென்னையில் அதிகரித்துக் காணப்பட்ட கொரோனா தொற்று கடந்த 2 நாட்களாகச் சற்று குறைந்து காணப்பட்டாலும், கொரோனாவால் ஏற்படும் உயிர் இழப்புகள் சற்று அதிகரித்துக் காணப்பட்டு உள்ளன.
அதன்படி, சென்னையில் கொரோனாவுக்கு நேற்று இரவு முதல் தற்போது வரை 18 பேர், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து உள்ளனர். இதில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 பேர், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்து உள்ளனர்.
மேலும், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்க சிகிச்சை பெற்று வந்த 5 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரும் இன்று அடுத்தடுத்து உயிர் இழந்து உள்ளனர்.
அத்துடன், சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் ஒருவரும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதன் காரணமாக, சென்னையில் இன்றும் மட்டும் கொரோனாவுக்கு உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
இதனால், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகம் வந்துள்ள மத்திய சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையிலான 5 பேர் குழு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும், சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களைச் சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டு உள்ளது.
அதன்படி, சென்னையில் அதிக பட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,657 பேருக்கு கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படுகிறது. அத்துடன், அண்ணா நகரில் 2,511 பேரும், தேனாம் பேட்டையில் 2,118 பேரும், ராயபுரம் மண்டலத்தில் 1,741 பேரும், தண்டையார்பேட்டையில் 1,628 பேரும், திரு.வி.க. நகரில் 1,778 பேரும், அம்பத்தூரில் 1,306 பேரும், வளசரவாக்கத்தில் 1,049 பேரும், அடையாறு மண்டலத்தில் 1,412 பேரும், திருவொற்றியூரில் 979 பேரும், ஆலந்தூரில் 799 பேரும், பெருங்குடியில் 798 பேரும், மாதவரம் 778 பேரும், சோழிங்கநல்லூரில் 463 பேரும், மணலியில் 463 பேரும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று
வருகின்றனர்.
மேலும், சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் நோயாளிகள் 26 பேருக்கும், ஊழியர்கள் 14 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொரோனாவால் தற்போது 21,766 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் மொத்த எண்ணிக்கை 72,500 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், அந்த மாவட்டத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,305 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் இது வரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
திருவாரூர் மாவட்டத்தில் 6 வி.ஏ.ஓ.க்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மன்னார்குடி அடுத்த கூத்தாநல்லூரில் ஒரு வட்டாட்சியர் மற்றும் 6 வி.ஏ.ஓ.வுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அந்த மாட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் 13 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பது, அந்த மாவட்ட மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டத்தில் இன்று புதிதாக 310 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,367 ஆக அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் இன்று மேலும் 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அந்த மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,439 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் ஊரடங்கு மீறல் காரணமாக, தமிழகத்தில் இதுவரை 17.47 கோடி ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 8,27,963 பேர் இது வரை கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இது வரை 6,26,334 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 7,54,582 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.