“சென்னையில் வீடுகளை விட்டு வெளியே வந்தால் முதலில் ரூ.2000 அபராதம்! பிறகு கடும் நடவடிக்கை!”
By Aruvi | Galatta | May 19, 2021, 12:26 pm
“சென்னையில் வீடுகளை விட்டு வெளியே வந்தால் முதலில் 2 ஆயிரம் ரூபாய் அபராதம், பிறகு கடும் கடும் நடவடிக்கை பாயும்” என்று, சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா வைரசின் 2 வது அலையான தமிழகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில், கொரோனா முதல் அலையைக் காட்டிலும், 2 வது அலையால் மிகப் பெரிய பாதிப்புகளும், அதைக் காட்டிலும் உயிர் இழப்புகள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்துக் காணப்படுகின்றன.
இதனால், சென்னையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக, சென்னை மாநகராட்சி சில கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
அதன் படி, “கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனையின் படி, கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள நபர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சென்னை மாநகராட்சியால் 2000 க்கும் மேற்பட்ட முன்கள தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்” என்று, சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி குறிப்பிட்டார்.
அத்துடன், “கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் வீடுகளைவிட்டு வெளியே வராமல் இருப்பதற்காக இந்த கடும் நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளதாகவும்” அவர் விளக்கம் அளித்தார்.
“கொரோனா வைரஸ் தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது வீடுகளை விட்டு வெளியே வருவதாகத் தொடர்ச்சியாகப் புகாராக வருகிறது“ என்றும், அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
“இத்தகைய செயலால் தான், கொரோனா தொற்று பரவல் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் பொது மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் மருத்துவரால் அறிவுறுத்தப்பட்ட நாட்கள் வரை வீடுகளை விட்டு வெளியில் வராமல் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது” என்றும், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தி உள்ளார்.
“அதனையும், மீறி தனிப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வருவது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு முதலில் அபராதம் விதிக்கப்பட்டு, பிறகு கொரோனா பாதுகாப்பு மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்” என்று, சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி கடுமையாக எச்சரித்து உள்ளார்.
முக்கியமாக, “வீடுகளை விட்டு வெளியே வரும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் குறித்த விவரங்களை அருகில் வசிப்பவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உள்ளிட்ட பொது மக்கள் யார் வேண்டுமானாலும் 044-25384520 என்கிற தொலைப்பேசி எண்ணில் புகார் அளிக்கலாம்” என்றும், சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.