“தமிழகத்தில் மேலும் சில கொரோனா கட்டுப்பாடுகள்?” நாளை ஆலோசனை..
By Aruvi | Galatta | Apr 15, 2021, 12:40 pm
தமிழகத்தில் கொரோனா 2 வது அலை கைமீறிய அளவில் உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
கொரோனாவின் 2 ஆம் அலை உலகம் முழுவதும் மீண்டும் தீவிரமாகவே உள்ளது.
தற்போது, உலகளவில் 13.88 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்ட்டு இருக்கிறது. உலகம் முழுவதும் இதுவரை 29.85 லட்சம் பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர். அதே நேரத்தில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 11.16 கோடி பேர் குணமடைந்து உள்ளனர்.
அதே நேரத்தில், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 1,40,74,564 ஆக அதிகரித்து உள்ளது.
அத்துடன், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 1,038 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலமாக, இந்தியாவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையானது 1,73,123 ஆக அதிகரித்து உள்ளது.
அதே போல், தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. நேற்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகைாயனது 2 வது நாளாக 8 ஆயிரத்தை நெருங்கியது.
இந்த நிலையில் தான், “தமிழகத்தில் கொரோனா 2 வது அலை கைமீறிய அளவில் உள்ளதாக” உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக தலைமை நீதிபதி அமர்வு அரியர் வழக்கை விசாரித்து வந்தது. இதில், ஆஜராவதற்காக வந்த அரசு தலைமை வழக்கறிஞரிடம் “தமிழகத்தில் கொரோனா 2 வது அலை பரவி வருவதாகவும், இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது” என்றும், நீதிபதிகள் தெரிவித்தனர்.
அத்துடன், “தமிழகத்தில் தடுப்பூசி குறித்து வரும் செய்திகள் உண்மையா? என்றும், நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்துப் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர், “தற்போது தடுப்பூசிகள் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன என்றும், ஆனால் கொரோனா 2 வது அலை கைமீறிச் சென்று விட்டது” என்றும், கவலைத் தெரிவித்தார்.
அப்போது, “நீதிமன்றங்களில் எந்த மாதிரியான தடுப்பு வழி முறைகள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் ஆலோசனைகளை வழங்க அரசு தயாரா?” எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “இது குறித்து அரசு சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம் அளிப்பார்” என்றும், வழக்கறிஞர் பதில் அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இன்றே சுகாதாரத்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்துவதாக நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.
அதே வேளையில், தமிழகத்தில் கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கு மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில், நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு, தமிழகத்தில் மேலும் சில கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.