ஃபேஸ்புக் மூலம் இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து பணம் பறிக்கும் மோசடி பெண்!
By Aruvi | Galatta | Feb 17, 2021, 04:57 pm
ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் ஆகும் இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து பெண் ஒருவர் பணம் பறிக்கும் மோசடி செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இது, பெண்களின் உலகம் என்பதற்கு, பெண்களின் காலம் என்பதற்கும், மீண்டும் ஒரு எதிர் மறையான சம்பவம் சாட்சியாக அமைந்திருக்கிறது.
மயிலாடுதுறை அருகே இருக்கும் மணக்குடியைச் சேர்ந்த கலியபெருமாள் என்பவரின் மகன் 26 வயதான பாலகுரு, அந்த பகுதியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இவருடன், மயிலாடுதுறை மூவலூரைச் சேர்ந்த மீரா என்கிற பெண், சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் ஆகி உள்ளார்.
இதனால், அவர்கள் இருவரும் ஃபேஸ்புக்கிலேயே தங்களது நட்பை வளர்த்துக்கொண்டு வந்தனர். இவர்களது நட்பு குறுகிய காலத்தில் மிக வேகமாக வளர்ந்த நிலையில், இருவரும் தங்களது செல்போன் நம்பரை பரிமாறிக்கொண்டதாகத் தெரிகிறது.
இதனையடுத்து, அவர்கள் இருவரும் செல்போனில் தொடர்ந்து பேசியும், சாட்டிங்கிலும் தங்களது நட்பை வளர்த்து வந்தனர்.
இப்படியாக, இவர்களது நட்பு சென்றுகொண்டிருந்த நிலையில், ஃபேஸ்புக் தோழி மீரா, காதல் ஆசை வார்த்தைகள் கூறி, பாலகுருவுக்கு காதல் வலை விரித்து உள்ளார். அந்த இளம் பெண்ணின் காதல் வார்த்தையில் கிரங்கிப் போன பாலகுரு, அந்த காதலை ஏற்றக்கொண்டதாகத் தெரிகிறது.
இதனையடுத்து, அவர்கள் இருவரம் காதலர்களாக அந்த பகுதியின் பல்வேறு இடங்களிலும் ஊர் சுற்றி வந்து உள்ளனர். இப்படியே அவர்கள் இருவரும் ஊர் சுற்றி வந்த நிலையில், ஒருநாள் காதலன் பாலகுரு, தன் காதலி மீராவை தனது வீட்டிற்கு அழைத்து வந்து உள்ளார். அப்போது, வீட்டில் இருந்த எல்லோரிடமும் அவர் காதலியை அறிமுகம் செய்து வைத்து உள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம், தனது பெற்றோரின் சம்மதத்துடன் முறைப்படி மீராவை அவர் திருமணம் செய்துகொண்டார். அதனைத்தொடர்ந்து, அடுத்த சில வாரங்களில் அந்த பெண்ணின் பெயர் மீரா இல்லை என்பது கணவன் பாலகுருவுக்கு தெரிய வந்தது.
அத்துடன், மீராவின் உண்மையான பெயர் ரஜபுநிஷா என்பதும், இவர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சதக்கத்துல்லா என்பவரின் மகள் என்பதும் தெரிய வந்தது. எனினும், காதலை விரும்பிய கணவன் பாலகுரு, அந்த பெண்ணுடன் திருமண வாழ்க்கையை மேலும் தொடர்ந்து உள்ளார்.
இந்த நிலையில், வேலை நிமித்தமாகக் கணவன் பாலகுரு, வெளியூர் சென்று உள்ளார். அப்போது, அவரது வீட்டுக்கு வேறொரு ஆண் ஒருவர் அடிக்கடி வந்து செல்வதாக அவரது உறவினர்கள், பாலகுருவிற்கு தெரிவித்து உள்ளனர்.
இதனால், மனைவி மீது சந்தேகப்பட்ட பாலகுரு, அந்த பெண்ணின் செல்போனை ஆராய்ந்து பார்த்து உள்ளார். அப்போது, மனைவி ரஜபுநிஷாவிற்கு திண்டுக்கல்லைச் சேர்ந்த பார்த்திபன் உள்ளிட்ட பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது கண்டு, அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து, திருமண வாழ்க்கையில் இணைந்திருந்ததால், கணவன் பாலகுரு, தன் மனைவி ரஜபுநிஷாவை கண்டித்து உள்ளார். இதன் காரணமாக, கணவன் - மனைவி இருவருக்கும் இடையே சண்டை வந்து உள்ளது.
இந்த சண்டையில், “நான் என் அம்மா வீட்டிற்குச் செல்கிறேன்” என்று, கூறிவிட்டுச் சென்ற ரஜபுநிஷா, மீண்டும் கணவன் வீட்டிற்கு வரவே இல்லை.
இதனால், அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட கணவன், தன் மனைவி குறித்து அந்த பகுதியில் விசாரித்துப் பார்த்து உள்ளார். அப்போது, “தன்னை 4 வதாக ரஜபுநிஷா திருமணம் செய்து கொண்டது” தெரிய வந்தது.
அதே நேரத்தில், திண்டுக்கலைச் சேர்ந்த பார்த்திபன் உடன் சென்று ரஜபுநிஷா, தற்போது குடும்பம் நடத்தி வருவதும் கணவன் பாலகுருவிற்கு தெரிய வந்தது.
மேலும், அந்த பெண் கணவன் வீட்டை விட்டு செல்லும் போது, வீட்டில் வைத்திருந்த ஒரு பவுன் செயின் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது.
இது குறித்து, பாதிக்கப்பட்ட கணவன் பாலகுரு, மனைவி ரஜபுநிஷாவின் தாயார் மும்தாஜிடம் போனில் கொண்டு உள்ளார். அப்போது “பணத்திற்காக தன்மகள் பலபேரை திருமணம் செய்துள்ளதாகவும், நீ ஒதுங்கிக்கொள்” என்று, அவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த பாலகுரு, மயிலாடுதுறை டிஎஸ்பி அண்ணாதுரையிடம் பரபரப்பு புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், “ஃபேஸ்புக் மற்றும் டிக் டாக்கில் வீடியோ பதிவுகளைப் பதிவிட்டு, அதற்கு சிறந்த கமெண்டுகளை பதிவிடும் இளைஞர்களைக் குறிவைத்து ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு, அவர்களிடம் இது போன்று பணம் பறித்து வந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.