நாடு முழுவதும் ஆகஸ்ட்டில் கல்லூரிகள் திறப்பு!
By Aruvi | Galatta | May 06, 2020, 09:50 am
இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள் கல்லூரிகள் திறக்கப்படலாம் என்று, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் தாக்கம் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் தேர்வுகளே நடத்த முடியாமல் ஒத்துவைக்கப்பட்டுள்ளன. இதனால், அனைத்து துறை கல்லூரி மாணவர்களும், செமஸ்டர் தேர்வுகளை எழுத முடியாமல், வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
40 நாட்கள் ஊரடங்கு முடிந்து, மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், மே மாதத்தில் நடைபெறவிருந்த நீட் தேர்வு, சிவில் சர்விஸ் தேர்வு ஒத்திவைக்கப்பட்டன.
இதனிடையே, 10 ஆம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணை ஜீன் மாதத்தில் வெளியிடப்படும் என்று, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து, மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், தனது டிவிட்டர் பக்கத்தின் மூலமாக மாணவர்களின் கேள்விகளுக்கு நேரலையில் பதிலளித்தார்.
அப்போது, ஒரு மாணவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், “2020-21-ம் கல்வி ஆண்டுக்கான இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் பழைய கல்லூரி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்குள்ளும், கல்லூரிகள் திறக்கப்படலாம் என்று கூறியிருந்தார்.
அதேபோல், “புதிய மாணவர்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிக்குள் கல்லூரிகள் தொடங்கப்படலாம்” என்றும், அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பதில் அளித்துள்ளார்.