தமிழக கோவில்களில் 3 வேளை அன்னதான திட்டம்! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் ஆகிய 3 கோவில்களில் தினமும் 3 வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
“முப்பொழுதும், எப்போழுதும் பக்திப் பசியோடு வருபவோருக்கு அன்பின் ருசியோடு” என்ற பெயரில், திருச்செந்தூர் முருகன் கோயில், திருத்தணி முருகன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகிய 3 கோயில்களில் நாள் முழுவதும் 3 வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் சற்று முன்பாக காணொலி காட்சி மூலமாக இன்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலாளர் இறையன்பு, ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
“முப்பொழுதும் அன்னதான திட்டம்” மூலமாக, தினமும் காலையில் கோயிலின் நடை திறந்தது முதல், இரவு கோயிலின் நடை அடைக்கும் வரை தினந்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
அத்துடன், தினமும் 3 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கவும், திருவிழா தினங்களில் தினம் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன் படி, காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த குறிப்பிட்ட 3 கோயிலிகளிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
மேலும், 3 கோவில்களும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி முதல் எப்போழுது வேண்டுமானாலும் உணவு வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
முக்கியமாக, அன்னதான திட்டத்தை முதல்வர் தொடக்கி வைத்ததையடுத்து சமயபுரம் கோவிலில் வாழை இலையில் ஜாங்கிரி, சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், வடை, பாயாசம் வழங்கப்பட்டது.
“கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் பார்சலாக வழங்கப்படும்” என்றும், இந்து அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக தினமும் 7,800 பக்தர்கள் பயன் பெறுவார்கள் என்றும், இந்த திட்டத்திற்காக, ஒரு மாதத்திற்கு 9.45 கோடி ரூபாய் செலவு ஆகின்றது என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருச்செந்தூரில் இருந்து இந்த நிகழ்வில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.
இதனையடுத்து, அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், “தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பசியின்றி செல்வதற்காக முழு நேர அன்னதான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது” என்று, குறிப்பிட்டார்.
“ஊரடங்கு நாட்கள் தவிர்த்து கோயில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் நாட்கள் முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்” என்றும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.