முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன் முதலில் கையெழுத்திட்ட 5 கோப்புகள்!
By Aruvi | Galatta | May 07, 2021, 03:34 pm
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4000 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி” உள்ளிட்ட முதல் 5 கோப்புகளில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டார்.
தமிழக முதலமைச்சராக இன்று காலை 9 மணிக்கு பொறுப்பேற்றுக் கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து
அமைச்சர்களாகத் துரை முருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
அனைவரும் பதவி ஏற்று கொண்டதும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் புதிய அமைச்சர்களுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குரூப் புகைப்படம்
எடுத்துக்கொண்டார்.
பதவியேற்பு விழாவையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய அமைச்சர்களுக்கு ராஜ்பவனில் ஆளுநர் தேநீர் விருந்து அளித்தார். அதன் பிறகு, சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று, தனது தாயாரிடம் ஆசி பெற்றார்.
அங்கு, கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின், ஆனந்த கண்ணீரில் கலங்கி நின்றார்.
பின்னர், சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று, கலைஞரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்துக்குச் சென்று மலர் தூவி அவர் மரியாதை செலுத்தினார். புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்களும்
அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அண்ணா, கருணாநிதி நினைவிடத்தைத் தொடர்ந்து பெரியார் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தார்.
அதன் பின்னர் அங்கிருந்து க.அன்பழகன் இல்லம் சென்று, அவரது படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதன் தொடர்ச்சியாக, தலைமைச் செயலகம் சென்ற ஸ்டாலினிக்கு காவல் துறையின் மரியாதை செய்யப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது இருக்கையில் வந்து அமர்ந்து, தனது பணிகளைத் தொடங்கினார்.
முதலமைச்சர் இருக்கையில் அமர்ந்த மு.க.ஸ்டாலின், முதன் முதலாக 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.
அதன் படி,
- ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். அதில், முதல் தவணையாக 2000 ரூபாய் வீதம் வழங்கப்படும் என்றும், அதுவும் இந்த மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
- ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கும் கோப்பில் அவர் கையெழுத்திட்டார். இந்த ஆணை மே 16 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் அமலுக்கு வருகிறது.
- அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் நாளை முதல் இலவசமாகப் பயணிக்கலாம் என்கிற கோப்பில் அவர் கையெழுத்திட்டார்.
- தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறும் மக்களின் கட்டணத்தைத் தமிழக அரசே ஏற்கும் திட்டத்தில் அவர் கையெழுத்திட்டார். காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனை கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும், அவர் அறிவித்தார்.
- பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வு காண “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தைச் செயல்படுத்த புதிய துறை உருவாக்கம் செய்யும் திட்டம் என்று மொத்தம் 5 முக்கிய கோப்புகளில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தன்னுடைய முதல் கையெழுத்திட்டார்.
அதே போல், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.