இசைஞானி இளையராஜாவை புகழ்ந்து தள்ளிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல் வாழ்த்து!
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன எம்பி. பதவி வழங்கப்பட்டு உள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இசை மேதை இளையராஜாவின் இசைக்கு மயங்காத மனங்களே இங்கு இல்லை. அப்படிப்பட்ட இசையின் ராஜ்யத்தில், இசைஞானி இளையராஜா, தமிழக இசை சாம்ராஜ்யத்தின் ராஜாவா, தமிழர்களின் எல்லோர் மனங்களிலும் வாழ்ந்து வருகிறார்.
இவற்றுடன், தமிழகத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் சுமார் 1200 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.
இவை தவிர, சிம்பொனி இசையமைத்த ஒரே இந்திய இசைக் கலைஞர் என்ற மங்காத புகழும் இளையராஜாவுக்கு உண்டு.
இந்த நிலையில் தான் அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி, மத்திய அரசு தற்போது கவுரவித்து இருக்கிறது.
அதன்படி, இசைஞானி இளையராஜா, தடகள வீராங்கனை பிடி. உஷா உள்ளிட்ட 4 பேருக்கு மாநிலங்களவை நியமன எம்பி. பதவி தற்போது வழங்கப்பட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து, இசை மேதை இளையராஜாவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஒப்பாரும் மிக்காரும் இல்லாத @ilaiyaraaja
அவர்களை கலைச் சாதனைக்காகக் கௌரவிக்க வேண்டும் எனில், ஒருமித்த மனதோடு ஜனாதிபதி பதவியே கொடுக்கலாம். இருந்தாலும், இந்த மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தையும் வாழ்த்துவோம்” என்று, பதிவிட்டு உள்ளார்.
அதே போல், மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஏழ்மை பின்புலத்தில் இருந்து வந்து சாதனைகள் பல புரிந்த இளையராஜாவின் தேசப்பணி சிறந்து விளங்க வாழ்த்துகள்” என்றும், கூறியுள்ளார்.
இதனிடையே, “இளையராஜா எம்.பி. யாக நியமிக்கப்பட்டதில் எந்த அரசியலும் இல்லை” என்று, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அத்துடன், “இளையராஜாவின் கருத்தை தனிப்பட்ட கருத்தாகவே பார்க்க வேண்டும் என்றும், அதில் அரசியலை பார்க்கக்கூடாது என்றும், இளையராஜாவை அனைவரும் வாழ்த்த வேண்டும்” அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.