“எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது” போலீஸை எரித்து கள்ளக்காதலி வெறிச்செயல்..
By Arul Valan Arasu | Galatta | 05:20 PM
“எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது” என்று கூறி கள்ளக்காதலி, போலீஸை எரித்து கொன்றுள்ளார்.
சென்னை திருமுல்லைவாயல் போலீஸ் குடியிருப்பில் போலீஸ்காரர் வெங்கடேசன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி அதிகாலை நேரத்தில், அவர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும்போது, போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்தார். அதில், பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி, “சென்னை சூளையில் உள்ள பள்ளியில் வெங்கடேசன் படிக்கும்போது, ஜெயா என்பவரைக் காதலித்துக் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் ஒரு மகன், ஒரு மகள் பிறந்துள்ளனர். இதனையடுத்து, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்துள்ளனர். அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இதனிடையே, கடந்த 2016 ஆம் ஆண்டு காவல்துறையில் வெங்கடேசன் பணிக்குச் சேர்ந்துள்ளார். அதற்கு முன்னதாக 2013 ஆம் ஆண்டில் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் யூத் பிரிகேடராக பணியாற்றும்போது, அங்கு பணியாற்றிய நண்பன் ஜோதிராமலிங்கத்தின் மனைவி ஆஷாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த விசயம் ஜோதிராமலிங்கத்துக்குத் தெரிந்து, அவர் ஆஷாவை விட்டு பிரிந்து சென்றுவிட்ட நிலையில், வெங்கடேசனும் மனைவி இல்லாமல் ஒரு மகளை வளர்க்க கஷ்டப்பட்டதாலும், ஆஷாவுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெங்கடேசனுக்கு வேறு சில பெண்களுடன் பழக்கம் இருப்பதாகச் சந்தேகப்பட்ட ஆஷா, அடிக்கடி அவருடன் சண்டைபோட்டுள்ளார்.
சம்பவத்தன்று, இரவு 12 மணிக்கு வெங்கடேசன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சாப்பாடு போட்டுக்கொண்டே “நீ லீவு போட்டுவிட்டு, எங்கே போய் சுற்றிவிட்டு, இவ்வளவு லேட்டாக வருகிறாய்” என்று கேட்டு சண்டைபோட்டுள்ளார். அதைப்பொருட்படுத்தாத வெங்கடேசன், தூங்கச் சென்றுள்ளார்.
அப்போது, 24 ஆம் தேதி அதிகாலை நேரத்தில், உடம்பில் ஏதோ ஊற்றுவதுபோல் இருந்தது கண்டு, கண்விழித்துப் பார்த்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்திற்காக வாங்கி வைத்த பெட்ரோல், தன் மீது ஊற்றப்படுவது வெங்கடேசனுக்குத் தெரியவந்தது. ஆனால், அதற்குள், “எனக்கு கிடைக்காத நீ, யாருக்கும் கிடைக்கக் கூடாது. செத்து தொலைடா” என்று கூறிக்கொண்டே, ஆஷா தீ வைத்துள்ளார்.
இதில், தீ கொழுந்துவிட்டு எரியத்தொடங்கிய நிலையில், வீட்டு வாசலுக்கு வெங்கடேசன் ஓடிவர, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். அப்போது, அவருக்குச் சிகிச்சை அளிக்கும்போது, வெங்கடேசன் தந்த வாக்குமூலத்தில்தான் இவ்வளவும் தெரியவந்தது. இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே, சென்னையில் போலீஸ்காரர் ஒருவரை அவரது காதலியே தீ வைத்து எரித்துக்கொன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.