21 கொலைகள்.. 50 வழக்குகள்.. ரவுடி காக்கா தோப்பு பாலாஜி கைது..!
By Arul Valan Arasu | Galatta | 06:41 PM
சென்னையைக் கலக்கி வந்த பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பிராட்வே காக்கா தோப்புபகுதியைச் சேர்ந்த பாலாஜி, அங்குள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். பாலாஜியின் சித்தாப்பா துரை, வியாசர்பாடியில் பிரபல ரவுடியாக இருந்துள்ளார்.
இதனால், சிறுவயதிலிருந்தே பாலாஜிக்கு ரவுடியாக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதன் காரணமாக, வேண்டும் என்றே சிறுவயது முதல் பல்வேறு சண்டைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர், தொடர் சண்டைகளில் ஈடுபட்டு, அடிக்கடி ஜெயில் சென்று வருவதும், ஜாமீனில் வெளியே வருவதுமாக இருந்துள்ளார்.
முதன் முதலாக மூலக்கொத்தளம் ரவுடி தாமுவின் அண்ணன் புஷ்பாவை, யுவராஜ் என்ற ரவுடியின் உதவியுடன் கொலை செய்துள்ளார். ஒருகட்டத்தில், யுவராஜ், பாலாஜியை விடப் பெரிய ரவுடியாக வலம் வரவே, தொழில் போட்டி காரணமாக, பாலாஜி அவரை கொலை செய்துள்ளார்.
இதன் மூலம் ஏரியாவில் பெரிய ரவுடியாக அறியப்பட்டார் பாலாஜி. அது முதல், வெறும் பாலாஜியாக அறியப்பட்டு வந்த அவர், அது முதல் காக்கா தோப்பு என்னும் அடைமொழியுடன், காக்கா தோப்பு பாலாஜி என்று அழைக்கப்பட்டார்.
இப்படியாகப் பிரபல ரவுடியாக வளர்ந்த காக்கா தோப்பு பாலாஜி, இதுவரை 21 கொலைகள் செய்துள்ளதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஆள் கடத்தல், பணம் கேட்டு மிரட்டல், அடிதடி என 30 க்கு மேற்பட்ட வழக்குகளும் அவர் மீது உள்ளது. இதனையடுத்து, அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், சென்னையில் போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காக்கா தோப்பு பாலாஜி, வசமாக போலீசாரிடம் சிக்கினார். இதனையடுத்து, காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.