“இன்ஸ்பெக்டர் தினம் தினம் என்னை டார்ச்சர் பண்றாரு” பெண் போலீஸ் வெளியிட்ட ஆடியோவால் அதிர்ச்சி.. பரபரப்பு..!
By Aruvi | Galatta | Dec 30, 2020, 03:39 pm
“இன்ஸ்பெக்டர் தினம் தினம் என்னை டார்ச்சர் பண்றாரு” என்று, பெண் போலீஸ் ஒருவர் வெளியிட்ட ஆடியோவால் கடும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவர், “சென்னை காவல் ஆய்வாளர் அதிகப்படியான பணிச்சுமை கொடுப்பதால், நான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக” காவலர்கள் வாட்ஸ்ஆப் குழுவில் ஒரு ஆடியோவை வெளியிட்டார். பெண் காவலர் ஒருவரின் இந்த ஆடியோ பதிவு தமிழ்நாடு முழுவதும் உள்ள சக காவலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பிட்ட அந்த ஆடியோவில், “நான் பணிபுரியும் காவல் நிலையத்தில் இருக்கும் காவல் ஆய்வாளர், நான் அவருக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காக, தொடர்ந்து அதிகப்படியான பணி சுமைகளை கொடுத்து வருவதாகவும், அவர் கொடுக்கும் வேலைகளை நான் செய்யவில்லை என்றால், வேறு எந்த காவல் நிலையத்திற்காவது பணியிடை மாற்றம் வாங்கிச் செல்ல வேண்டும் என்று எல்லோர் முன்னிலையிலும் தினமும் திட்டுவதாகவும்” அவர் பதிவு செய்துள்ளார்.
இப்படியாக, ஒரு ஆண் இன்ஸ்பெக்டரால் பாதிக்கப்பட்ட பெண் காவலர் ஒருவர் வெளியிட்ட இந்த வாட்ஸ்ஆப் ஆடியோவில் “பணி சுமையால் அதிகப்படியான காவல் துறையினர் தற்கொலை செய்து கொள்வதாகவும், அதன் படி நானும் தற்கொலை செய்து கொள்கிறேன் என்றும், அப்படி நான் தற்கொலை செய்து கொண்டால் தான் அனைத்து பெண் காவலர்களுக்கும் விடிவுகாலம் கிடைக்கும்” என்று கூறிக்கொண்டே, அந்த ஆடியோவில் அந்த பெண் காவலர் கதறி அழுதிருக்கிறார்.
பெண் காவலர் பேசி உள்ள இந்த ஆடியோ, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளரின் தொலைப்பேசி எண் தற்போது தொடர்புகொள்ள முடியாத இடத்தில் இருப்பதாகவும், அவர் தற்போது எங்கே இருக்கிறார் என்று கூட தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதே போல், இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக சம்மந்தப்பட்ட பெண் காவலரிடம் சக செய்தியாளர்கள் விளக்கம் கேட்ட போது, நான் இப்போது எதுவும் பேசும் மன நிலையில் இல்லை என்றும், ஆனால் நான் பேசிய அந்த ஆடியோ உண்மை தான்” என்றும், அந்த பெண் காவலர் கூறியுள்ளார்.
அத்துடன், பெண் காவலரின் இந்த ஆடியோ வெளியானதும், அந்த எல்லைக்குட்பட்ட துணை ஆணையர் தன்னை தொடர்பு கொண்டு பேசியதாகவும், இது குறித்து விசாரிப்பதாக அவர் நம்பிக்கை அளித்திருப்பதாகவும்” பெண் காவலர் கூறியுள்ளார். இதனால், சம்மந்தப்பட்ட ஆண் காவல் ஆய்வாளர் மீது விசாரணை நடவடிக்கைகள் பாயலாம் என்றும் போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனால், தமிழக போலீசார் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.