“5 நாள் பசி.. அடுத்த வேளை சாப்பாடு எப்போதுனு தெரியல..” செயின் பறிப்பில் ஈடுபட்டு நபரின் கதையே கேட்டு கலங்கி நின்ற போலீஸ்!
“5 நாள் சாப்பிடாமல் பயங்கர பசியால் இருந்த நபர், அடுத்த வேளை சாப்பாடுக்கு என்ன செய்ய போகிறோம்? என்று தெரியாமல், செயின் பறிப்பில் ஈடுபட்டு, போலீசாரிடம் சிக்கி தனது பசி கொடுமையை பற்றி கூறி கண்ணீர் விட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தாம்பரம் அருடுத்து உள்ள சிட்லபாக்கம் ஜட்ஜ் காலனியில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 70 வயதான ஒரு மூதாட்டி, டி.பி. பார்த்துக்கொண்டு இருந்து உள்ளார்.
அப்போது, அந்த வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்த ஒரு இளைஞன் அந்த மூதாட்டி அணிந்திருந்த 4 சவரன் தங்க நகையை பறித்து உள்ளார்.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த மூதாட்டி, சத்தம் போட்டு உதவிக்கு ஆட்களை அழைக்கவே, அந்த இளைஞன் அங்கிருந்து ஓட்டம் பிடித்து உள்ளார்.
ஆனாலும், அந்த மூதாட்டியின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த நபரை விரட்டிப் பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அப்போது, போலீசார் அவனை அடித்து விசாரிக்கலாம் என்று நினைத்த போது, அவனது மெலிந்த உடல் மற்றும் பரிதாபமான தோற்றத்தில் இருக்கும் அவனது நிலையைக் கண்டு இரக்கப்பட்டு உள்ளனர்.
இதனால், “நீ யார்? ஏன் இப்படி செய்தாய்?” என்று விசாரித்து உள்ளனர்.
அப்போது, அழாத குறையாக பேசிய அவன், “நான் சாப்பிட்டு 5 நாட்கள் ஆகிவிட்டது சார், முதல்ல சாப்பாடு வாங்கித் தாங்க, என்னால சாப்பிட முடியால” என்று, கலங்கியிருக்கிறான்.
இதனைக் கேட்ட போலீசாரும், கண்கள் கலங்கி நிற்க உடனடியாக சாப்பாடு வாங்கி கொடுத்து உள்ளனர். அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை போலீசாரும் எதுவும் பேசவில்லை.
கிட்டதட்ட 5 நாட்களுக்குப் பிறகு சாப்பிட்ட அவன், நன்றி உணர்வோடு அதன் பிறகு போலீசாரிடம் பேசத் தொடங்கினான், “என் பெயர் மோகன குமார், நான் வந்தவாசி” என்று, தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.
தொடர்ந்து பேசிய அவன், “கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வேலை தேடித் வந்த நான், கொரோனா காலம் என்பதால் எனக்கு எங்கேயும் வேலை கிடைக்கவில்லை.
இதனால், தங்க கூட இடம் இல்லாமல், ஊருக்கும் செல்ல முடியாமல் சென்னையிலேயே சாலையோரம் தங்கினேன். தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் அவ்வப்போது எனக்கு உணவு தருவார்கள். அந்த சாப்பாட்டிற்காகவே நானும் அப்படியே சாலையோரம் தங்கி விட்டேன்.
ஒரு கட்டத்தில், எனக்கு 3 வேலையும் உணவு கிடைத்த நிலையில் நான் வேலைக்கு செல்வதையே கூட மறந்து விட்டேன்.
ஆனால், கடந்த சில மாதங்களாக எனக்கு போதிய உணவு கிடைக்கவில்லை.
குறிப்பாக, கடந்த 5 நாட்களாக சுத்தமாக உணவு கிடைக்காமல் தவித்து வந்த நிலையில், இந்த மூதாட்டியின் கழுத்தில் உள்ள நகையை பார்த்தபோது, அதை பறித்து விற்றால், அதிலிருந்து கிடைக்கும் பணத்திலிருந்து பல மாதங்கள் நல்லா சாப்பாடு சாப்பிடலாம் என்று, நினைத்து, இந்த தவறை செய்துவிட்டேன்” என்று, கூறியிருக்கிறான்.
ஆனால், திட்டம் போட்டு தங்க நகைகளை பறித்தவிட்ட போதிலும், 5 நாட்களாக சாப்பிடாமல் இருந்த காரணத்தாலும், பயங்கர பசியாலும் ஓட முடியாத நிலையில், பொது மக்களிடம் மாட்டிக்கொண்டேன்” என்றும், அவனே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறான்.
இதனைக் கேட்டு கலங்கி நின்ற போலீசார், “சட்டப்படி நடக்க வேண்டும் என்பதற்காக, பசிக்காக திருடினாலும் குற்றம் தான்” என்று கூறி, அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
குறிப்பாக, “சிறையில் 3 வேளையும் உணவு தருவார்களா? என்று ஆர்வமாக கேட்ட அவர், “ 3 வேளையும் உணவு தந்தால் நான் எத்தனை நாள் வேண்டுமானாலும் சிறையில் இருப்பேன்” என்று, அவன் சந்தோஷமாக கூறியிருக்கிறார், என்றும், கூறப்படுகிறது.