தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக முதல்வர் பழனிசாமி சில மணி நேரத்துக்கு முன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் பல்வேறு தளர்வுகளுடன் இப்போதுவரை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஜூலை 31ம் தேதியுடன் பொது முடக்கம் முடிவடைய இருந்த நிலையில், அதே கட்டுப்பாடுகளுடன், மீண்டும் ஆகஸ்ட் 31 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நோய்ப்பாதிப்பு அதிகம் பதிவாகிவரும் சென்னைக்கு விடுக்கப்பட்டிருக்கும் முக்கியமான சில அம்சங்கள் :

``கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 31.7.2020 முடிய தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், ஆகஸ்ட் 31 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

மேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி,  தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கும் 1.8.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

1) தற்போது 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். 

2) உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளுக்கென அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து
காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது. உணவகங்களில் முன்பு இருந்தது (31.7.2020 வரை) போன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.

3) ஏற்கனவே அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு ஏற்கனவே அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவலாயங்களிலும் மட்டும் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும்.

பெரிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.

4) காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தக் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. 

5) ஏற்கனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள், தற்போது காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

 6) அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் மின் வணிக நிறுவனங்கள் மூலமாக வழங்க அனுமதிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

இவற்றோடு சேர்த்து மேலும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

- ஜெ.நிவேதா