“சென்னையில் கொரோனா அதிகரிப்பு!” அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை..
“சென்னையில் 2 மண்டலங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என்றும், அது குறித்து பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை” என்றும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த உலகத்தையும் புரட்டிப்போட்ட கொரோனா, இந்தியா உட்பட ஒட்டு மொத்த உலகத்தையே திருப்பிப் போட்டது.
அதாவது, கொரோனா என்னும் கொடிய வைரசானது, கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து மற்ற உலக நாடுகளுக்குத் தொற்றாக பரவத் தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த கொரோனா என்னும் கொடிய வைரஸ், முதல் அலையை கடந்து, 2 வது அலையும் வந்து, இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் 3 வது அலையும் கடந்திருக்கிறது. இவற்றில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸ், மெல்ல இயல்பு நிலை திரும்பியிருந்தது.
இந்த நிலையில் தான், தமிழகத்தில் தினசரி கொரோனா எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தற்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில், தமிழகத்தில் நாளோன்றுக்கு 22 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த தொற்று எண்ணிக்கையானது சுமார் 100 ஆக அதிகரித்து இருக்கிறது.
இந்த எண்ணிக்கையானது கடந்த 1 ஆம் தேதி அன்று 98 பேருக்குகொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், 80 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
இதனால், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதார செயலர் கடிதம் எழுதி எச்சரிக்கை செய்திருந்தார்.
அந்த கடிதத்தில், “கொரோனா தொற்று குவியல்கள் corona cluster எண்ணிக்கையானது, தற்போது சற்று அதிகரித்து இருக்கிறது” என்றும், அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்த நிலையில் தான், சென்னை தி. நகர் கிரி சாலையில் இருக்கும் ஒரு குடியிருப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், குறிப்பிட்ட அந்த பகுதிகளில் ஆய்வு செய்தார்.
இதனையடுத்து, அங்கு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கொரோனா தொற்று இந்தியா முழுவதும் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதாக” குறிப்பிட்டார்.
அத்துடன், “தமிழகத்தில் சுகாதரத்துறை, உள்ளாட்சி அமைப்புகளை மிகுந்த கவனத்துடன் இருக்க முதலமைச்சர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார் என்றும், கடந்த 3 மாதங்களுக்கு மேலாக உயிரிழப்பு இல்லாத பாதிப்பு என்கிற நிலை இருந்து வருகிறது” என்றும், அவர் கூறியுள்ளார்.
“அண்ணா பல்கலைக்கழகம், சத்ய சாய், ஐஐடி, விஐடி ஆகிய கல்லூரிகளில் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது உள்ளது என்றும், ஆனால் 4 கல்லூரிகளிலும், மாணவர்கள் மாஸ்க் அணிவது, உணவருந்தும் போது சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து வருகின்றனர் என்றும், இதனால் கொரோனா தொற்று பாதிப்பு இந்த கல்லூரிகளில் வெகுவாக குறைந்து வருகிறது” என்றும், அவர் கூறினார்.
“சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்பு சற்று அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது என்றும், அதன்படி போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும், சென்னையில் 9 மற்றும் 13 ஆகிய மண்டலங்களில் தொற்று அதிகமாக உள்ளது” என்றும், அவர் தெரிவித்தார்.
“சென்னையில் மொத்தம் 370 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனர் என்றும், சென்னையிலும் ஒரு சில இடத்தில் மட்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபருக்கு பாதிப்பு ஏற்படுகிறது” என்றும், அவர் கவலையுடன் கூறினார்.
குறிப்பாக, “பாதிப்பின் வேகம் சற்று அதிகமாக இருந்தாலும் உயிரிழப்பு போன்ற நிலை இல்லாததால், பொது மக்கள் அச்சப்பட வேண்டிய தேவையில்லை என்றும், கொரோனா தொற்று பாதிப்பு எங்கெல்லாம் அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் சுகாதரத்துறை அதிகாரிகள் உடனடியாக சென்று தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்” என்றும், அவர் உறுதிப்பட தெரிவித்தார்.
இதனிடையே, சுகாதார செயலாளர் ராதகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையருக்கு தற்போது கடிதம் அனுப்பி, “தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளதா?” என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று, வலியுறுத்தி உள்ளார்.