மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக மாறிய சென்னை!
By Aruvi | Galatta | 01:08 PM
தமிழகத்தில் போகிப் பண்டிகை கலைகட்டி உள்ள நிலையில், மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக பகுதியாகச் சென்னை மாறி உள்ளது.
“பழையன கழிதலும்.. புதியன புகுதலும்” தான் போகிப் பண்டிகையின் தாற்பரியம். அதன்படி, பழையதை மறந்து, புதிய விடியலுக்கான ஆயத்தமாக இந்த போகிப் பண்டிகை ஆண்டுதோறும் மார்கழி மாதத்தின் கடைசி நாளிலும், பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாளிலும் மிகவும் விசேசமாகத் தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று அதிகாலையிலேயே சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், வீட்டில் உள்ள பாய் உள்பட பல பழைய பொருட்களை வீட்டு வாசலில் போட்டு, தீ வைத்து எரித்து, சிறுவர் சிறுமிகள் மேளம் அடித்துப் போகிப் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதன் காரணமாக, சென்னையில் மார்கழி பனியை விரட்டி அடிக்கும் அளவுக்கு, வானில் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. குறிப்பாக, சென்னையில் எதிர் எதிர்த் திசையில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்குப் புகை மூட்டம் அதிக அளவில் காணப்பட்டன.
குறிப்பாக, காற்று தரக் குறியீடு 100 க்கு மேல் இருந்தால், அது மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் சுவாசிக்கத் தகுதியற்ற நிலையில், மாசுபட்டிருப்பதாகக் கருதப்படும்.
அதன்படி, இன்று காலை 6 மணி நிலவரப்படி சென்னை கொடுங்கையூரில் காற்று தரக் குறியீடு 1118 என்ற அளவிலும், அண்ணாநகரில் 1118 என்ற அளவிலும், மணலி பகுதியில் 932 என்ற அளவிலும், ராமாபுரத்தில் 568 என்ற அளவிலும், ஆழ்வார்பேட்டையில் 326 என்ற அளவிலும் இருந்ததாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால், மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக பகுதியாகச் சென்னை மாறி வருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.