சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தொடக்கம்!
By Madhalai Aron | Galatta | Jul 10, 2020, 01:04 pm
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், மொபைல் கடை வைத்து நடத்திவந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டுப் பலியாகியிருந்தனர். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தினை தாமாக முன்வந்து எடுத்து நடத்தியது மதுரை கிளை உயர்நீதிமன்றம். வழக்கு, நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அமர்வின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தற்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள், முன் ஜாமீனுக்கு அப்ளை செய்தனர். இதற்கிடையில், இவர்களுக்கு எதிராகச் சாட்சி சொன்னதற்காகக் காவலர் ரேவதி தனக்குப் பாதுகாப்பில்லை எனக்கூறி தன் அச்சத்தைத் தெரிவித்தார். `உண்மையைச் சொன்னதற்காக ரேவதிக்குப் பாதுகாப்பும், கொலை செய்தமைக்காக மீதமிருந்த காவலர்களுக்குக் கடுமையான தண்டனையும் தரப்பட வேண்டும்' எனக்கூறி, பொதுமக்கள் பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கினர்.
இவ்வளவு பாராட்டுகளைப் பெற்ற ரேவதி, 15 வருடப் பணி அனுபவம் இருக்கும் 36 வயதை ஒட்டியவர். இவ்வளவு நீண்ட கால பணி அனுபவம் இருந்த போதிலும் மேலதிகாரிக்குப் பயந்த, அதிகம் யோசித்துப் பேசும் சமூகத்துக்குப் பயந்த சாமானிய பெண்ணாகவே அவர் பணிக்காலத்தில் இருந்திருக்கிறார் ரேவதி. இப்போதும் அப்படியே, இருக்கிறார். ரேவதி தனக்கு நிலவும் பயத்தைத் தெரிவித்தது தொடர்ந்து, தமிழ் திரையுலக பிரபலங்கள், இயக்குநர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கத் தொடர்ந்தனர். ரேவதியைப் பாதுகாப்பது, அரசின் கடமை எனக்கூறினர் அனைவரும்.
சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு எதிரான குரல்களும், அங்கு இதற்கு முன் நடந்த மோசமான சம்பவங்களும்கூட இந்த சூழலில் வெளிவரத்தொடங்கியது. `அழைத்துவரப்படும் கைதிகளை அடிப்பதென்பது, அந்த ஸ்டேஷன்ல ரொம்ப வழக்கமான விஷயம்தான். ஏறத்தாழ 38 பேர், இப்படி ஸ்டேஷன் அழைத்துவரப்பட்ட கொடூரமாக தாக்கப்பட்டிருக்காங்க' என அப்பகுதி மக்கள் ஊடகங்களில் பேட்டியளிக்கத் தொடங்கியதால், விஷயம் சீரியஸாக மாறத்தொடங்கியது.
அனைத்தையும் கண்ட மாநில அரசு, இது தொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது. அதன்பேரில், இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. தற்போது இந்த வழக்கு குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
நிகழ்ந்த அனைத்து அசம்பாவிதங்களுக்கும் பதிலளிக்கும் விதமாக, தமிழக அரசு சார்பில், "சி.பி.சி.ஐ.டி விசாரணையில் 10 பேரைக் கைது செய்துள்ளோம். மேலும், சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. ஆவணங்கள் அனைத்தும் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. சாட்சியம் அளித்த தலைமைக் காவலர் ரேவதிக்குக் காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகி, “சி.பி.ஐ அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழு, நாளை தமிழகம் வருகிறது. நாளை முதல் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை செய்ய உள்ளனர். தற்போது வரை சி.பி.ஐ தரப்பில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், ``சி.பி.சி.ஐ.டி, தற்போதைய நிலையை அறிக்கையாகத் தயார் செய்து சீலிடப்பட்ட கவரில் வைத்துத் தாக்கல் செய்ய வேண்டும். அறிக்கையில், சாத்தான்குளம் காவல்நிலையம், மருத்துவமனை மற்றும் கோவில்பட்டி கிளைச் சிறையில் என்ன நடந்தது என்பதன் முழு விவரங்கள் இருக்க வேண்டும்.
சி.பி.சி.ஐ.டி’யோ, சி.பி.ஐ’யோ கைது செய்யப்பட்டவர்களைக் கைது செய்யப்பட்ட முதல் 15 நாள்கள் முடிவடைவதற்குள்ளாகக் காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
தற்போது, சாத்தான்குளம் காவல்நிலையம், கிளை சிறை, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆவணங்கள், பொருட்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
விசாரணை இன்று தொடங்கப்பட இருக்கும் நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் 7 பேர் இன்று காலை சிறப்பு விமானத்தில் டெல்லியிலிருந்து மதுரை வந்தார்கள். இதுவரை இந்த வழக்கு தொடர்பாகக் கைப்பற்றப்பட்டுள்ள ஆதாரங்கள் குறித்து ஆய்வு செய்த பின்னர் அவர்கள் விசாரணையைத் தொடங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
- பெ.மதலை ஆரோன்.