“சோறு திண்ணா படிச்சு பாருங்க..” “விவசாயிகள் புரட்சி.. மோடி அரசின் சூழ்ச்சி என்ன தெரியுமா?” பொளந்துகட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு!
By Aruvi | Galatta | Dec 09, 2020, 05:50 pm
புதிய வேளாண் சட்டத்தில் உள்ள மோடி அரசின் சூழ்ச்சிகளை பட்டியல் போட்டுள்ள காவிரி உரிமை மீட்புக் குழு, “உழவர்களை மட்டுமல்ல மொத்த மக்களையும் தாக்கும் 3 சட்டங்களை முறியடிப்போம்” என்று, தமிழ் நாடெங்கும் உள்ள இந்திய அரசு மற்றும் தமிழ் நாடு அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட பொது மக்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளது.
இது தொடர்பாக காவிரி உரிமை மீட்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெருங்குழும வேட்டைக்கான மூன்று சட்டங்களை வேளாண் சட்டங்கள் என்ற பெயரில் மோடி அரசு இயற்றியுள்ளது. இந்தச் சட்டங்கள் அவசரச் சட்டங்களாக 2020 ஜீன் மாதம் பிறப்பிக்கப்பட்ட காலத்திலேயே அவற்றை எதிர்த்து ஊர் ஊராகத் துண்டறிக்கை கொடுத்து பரப்புரை செய்தது காவிரி உரிமை மீட்புக்குழு. அத்துடன் அந்த மூன்று அவசரச் சட்ட நகல்களையும் எரித்துப் போராடினோம்.
ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் மூன்று சட்டங்களையும் நாடாளுமன்றத்தின் வழியாக நிரந்தரச் சட்டங்களாக்கியுள்ளது மோடி அரசு. இந்த மூன்று சட்டங்களையும் முழுமையாக நீக்க வேண்டும் என்று உறுதியாகக் கோரி பஞ்சாப், அரியானா, உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள் டெல்லியில் 14 நாட்களுக்கு மேலாக முற்றுகை இட்டுப் போராடி வருகிறார்கள். அவர்கள் அமைத்துள்ள போராட்டக் குழு மூன்று சட்டங்களை நீக்க வலியுறுத்தி நேற்றைய தினம் அனைத்திந்திய முழு அடைப்புப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தது. அதிலும் நாம் பங்கேற்றோம்” என்று, குறிப்பிட்டு உள்ளது.
“இதனையடுத்து, மோடி அரசின் மூன்று உழவர் பகை வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, வரும் 12.12.2020 சனிக்கிழமை அன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் முன் மறியல் நடத்தப்படுகின்றது” என்று, அறிவித்துள்ளது.
“மோடி அரசின் மூன்று சட்டங்களும் வேளாண் சட்டங்கள் அல்ல; முதலாளியப் பெருங்குழும வேட்டைச் சட்டங்கள்!
வேளாண் விளைபொருள் விற்பனையில் இடைத்தரகர்களை ஒழித்துவிட்டதாகத் தலைமை அமைச்சர் மோடி கூறுவது உண்மையா?
1. “உழவர்களின் விளைபொருள் வணிக ஊக்குவிப்புச் சட்டம் - 2020” - இன் பிரிவு 2, உழவர்களின் விளைபொருட்களை வாங்கி, பெருங்குழுமங்களிடம் விற்கும் வணிகர்கள் (Traders) இருப்பார்கள்” என்று கூறுகிறது.
2. “உழவர்களுக்கான விலை உறுதிப்பாடு மற்றும் பண்ணைச் சேவைச் சட்டம் - 2020” பிரிவு 10, - Aggregator என்னும் ஒருங்கு திரட்டுபவர், உழவர்கள் மற்றும் வணிகர்களிடமிருந்து விளை பொருட்களை வாங்கித் தருவார்” என்று கூறுகிறது.
3. “இன்றியமையாப் பண்டங்கள் திருத்தச் சட்டம் - 2020” நோக்க உரை - வேளாண்மை, அது தொடர்பான தொழில்கள், சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டும்” என்று கூறுகிறது.
இந்த மூன்று சட்டங்களும் இணைய வணிகத்தை (Online Trade) ஊக்குவிக்க வேண்டும் என்கின்றன.
இவர்கள் அனைவரும் இடைத்தரகர்களே; உள்நாட்டு, வெளிநாட்டுப் பெருங்குழும முதலாளிகளே! சிறிய, நடுத்தர உள்ளூர் வணிகர்களையும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களையும், வடநாட்டு மண்டிகளையும் ஒழித்துக் கட்டுவதே மோடி அரசின் நோக்கம்” என்று, பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது.
“தேன் என்று சொல்லி நாக்கில் இனிக்கின்ற ரசாயனம் தடவுவது போல், கன்னியாகுமரியிலிருந்து காஸ்மீர் வரை கொண்டு போய் விளை பொருட்களை
உழவர்கள் விற்றுக் கொள்ளலாம் என்கிறார் மோடி! உள்ளூரில் விற்கவே நாம் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல! ‘காஜ்மீர் வரை போ’ என்று நம்மைக் கேலி செய்கிறார்!
இந்திய அரசு அமைத்த எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி உற்பத்திச் செலவுடன் 50 விழுக்காடு தொகை சேர்த்து விளை பொருட்களின் விலையை வரையறுத்து சட்டம் இயற்ற மோடி அரசு மறுப்பதேன்? குறைந்த அளவு ஆதரவு விலை தருவோம் என்றுகூட இச்சட்டங்கள் கூறாதது ஏன்? அரசு செய்யும் கொள்முதல் தொடரும் என்று இச்சட்டங்கள் சொல்லாதது ஏன்?” என்று, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது.
குறிப்பாக, “மோடி அரசின் சூழ்ச்சி புரிகிறதா? ” என்று, குறிப்பிட்டு காவிரி உரிமை மீட்புக் குழு பட்டியல் ஒன்றையும் அளித்து உள்ளது.
அதில், “1. உழவர்களை நிலத்தைவிட்டு வெளியேற்றி, அமெரிக்கா போல் 5,000 - 10,000 ஏக்கர் தனியார் பண்ணைகளை உருவாக்கிட, ஒப்பந்தப் பண்ணைச் சட்டம்!
2. உணவுப் பொருள் கொள்முதலில் அரசு ஒதுங்கிக் கொண்டு உள்ளூர் வணிகர்களை ஓரங்கட்டிவிட்டு அம்பானி, அதானிகளை வேட்டையாட விடுவது! அவர்கள் வைத்ததே விலை!
3. அரசு கொள்முதல் இல்லை; எனவே ஞாய விலைக் கடைகளும் இருக்காது.
4. வசதி உள்ளவர்கள், அதிக விலை கொடுத்து வாங்கி நுகரட்டும்; மற்றவர்கள் திண்டாடித் தெருவில் அலையட்டும்!
5. இவ்வாறு அனைத்துப் பிரிவு மக்களையும் பாதிப்பதுடன், மாநில அரசின் உரிமைகளையும் பறிக்கின்ற இம்மூன்று சட்டங்களையும் எடப்பாடியார் அரசு ஆதரிப்பது கொடுந்துரோகம்!
6. அடுத்து, வேளாண்மைக்கான இலவச மின்சாரம், வீட்டிற்கான மின்சாரச் சலுகைகள் அனைத்தையும் பறித்து, மின்சாரத்தை முதலாளியப் பெருங்குழுமங்களிடம் கொடுக்க சட்டம் தயாரித்துள்ளது மோடி அரசு” என்று, பகிரங்கமாகவே குற்றம்சாட்டி உள்ளது.
மேலும், “இதையும் எடப்பாடி அரசு ஆதரித்தாலும் வியப்பில்லை.
மூன்று சட்டங்களையும் முறியடிப்போம்!
இந்திய அரசு - தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் வரும் 12.12.2020 சனிக்கிழமை மறியல் போராட்டம் நடத்தப்படுகிறது.
உழவர்களும் உரிமை மீட்பு உணர்வாளர்களும் இப்போராட்டங்களில் திரளாகக் கலந்து
கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்” என்றும், காவிரி உரிமை மீட்புக் குழு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.