“10,11,12 ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது” - அன்பில் மகேஷ்
“தமிழகத்தில் நடப்பாண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது” என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2 ஆம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு தொடர்ந்து தள்ளிப்போனது.
ஏற்னெவே 10 ஆம் வகுப்பும் மற்றும் 11, 12 ஆம் வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இவற்றுடன், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று, தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், வரும் நவம்பர் 1 ஆம் தேதி ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்தும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்வுகள் குறித்தும், பள்ளிக் கல்வித் துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பாகவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “திட்டமிட்டபடி நவம்பர் 1 ஆம் தேதி 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும்” என்று, குறிப்பிட்டார்.
“காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் இந்தாண்டு நடத்துவதற்கான வாய்ப்பில்லை என்றும், டிசம்பர் மாதத்தில் ஒருங்கிணைந்த முறையில் ஒரே ஒரு தேர்வை மட்டும் நடத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாகவும்” அவர் கூறினார்.
மேலும், “5 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் நீண்ட நேரம் மாஸ்க் அணிந்து வகுப்புகளில் தொடர்சியாக அமர்வது என்பது கடினமான ஒரு சூழ்நிலையாக இருக்கும் என்பதால், பெற்றோர்கள் விரும்பினால் ஒரு மணி நேரத்தில் கூட பிள்ளைகளை வீடுகளுக்கு அழைத்துச் செல்லலாம்” என்றும், அவர் குறிப்பிட்டு பேசினார்.
இவற்றுடன், “மாணவர்களின் கற்றல் குறைப்பாட்டை போக்குவதற்காக 'மக்கள் பள்ளி திட்டம்' என்ற திட்டம் வரும் 18 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளதாகவும்” அவர் பேசினார்.
அத்துடன், “10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு நடைபெறும்” என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.