மதுபானம் வீடுகளுக்கு விநியோகம் செய்ய முடியுமா? - உச்ச நீதிமன்றம்
By Aruvi | Galatta | May 08, 2020, 04:30 pm
மதுபானம் வீடுகளுக்கு விநியோகம் செய்வது குறித்து, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக, 40 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 3 வது முறையாக வரும் 17 ஆம் தேதி வரை, ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால், நேற்று முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கின்றன. அதன்படி, தமிழகத்தில் பொது முடக்கத்துக்குப் பின் நேற்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலம் 170 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை வீடியோ கான்பரன்சிங் இன்று விசாரித்தது.
அப்போது, மது விற்பனையைத் தடை செய்ய உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
மேலும், கொரோனா பரவாமல் இருக்கும் வகையில், சமூக தொலைதூரத்தைப் பராமரிக்கும் விதமாக, மாநில அரசுகள் வீடு தோறும் மதுவை விநியோகம் செய்வது அல்லது மறைமுகமாக மதுபானம் விற்பனை செய்வது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
இதனிடையே, இந்தியாவில் தற்போது வீட்டுக்கு மதுபானம் வழங்குவதற்கான சட்டப்பூர்வமா ஏற்பாடுகள் இதுவரை எதுவும் இல்லாத நிலையில், உணவு விநியோக நிறுவனமான ஜுமாடோ, மதுபானத்தை வீட்டுக்கு வழங்குவதைப் பற்றி பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.