அயோத்தி வழக்கில் இதற்கு முன்பு என்னென்ன நிகழ்வுகள் நடந்தது என்பதை தற்போது பார்க்கலாம். 

சுதந்திர இந்தியாவிற்கு முன்பு, அதாவது இந்தியா ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டிருந்த காலத்திற்கு முன்பு; 16 ஆம் நூற்றாண்டில் அயோத்தி இருந்த நிலப்பரப்பை ஆண்ட, முகலாய மன்னர்கள் கால கட்டத்தில் தான் அங்கு பாபர் மசூதி கட்டப்பட்டது.

Ayodhya case

1528 ஆம் ஆண்டு, அயோத்தியில் பேரரசர் பாபர், அந்த பகுதியில் ஒரு மசூதியைக் கட்டுகிறார்.

முகலாய மன்னர்களின் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலம் சுமார் 200 ஆண்டுகள் முதல் 300 ஆண்டுகள் வரை நடைபெற்றது. அதன்பிறகே சுதந்திர இந்தியா பிறந்தது.

1853 ஆம் ஆண்டு முதல், ஆங்கிலேய ஆட்சிக்காலத்தின்போது, அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இருந்த இடத்தில், இந்துக்களுக்கும் -இஸ்லாமியர்களுக்கும் மதம் பிரச்சனை எழுகிறது. இதனால், குறிப்பிட்ட அந்த இடத்தின் உள்பகுதியை இஸ்லாமியர்களுக்கும், வெளிப்பகுதியை இந்து அமைப்பினருக்கும் ஆங்கிலேயர்களால் ஒதுக்கிக்கொடுக்கப்பட்டது.

1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி, சுதந்திர இந்தியா பிறந்தது.

1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல், சுதந்திர இந்தியாவில், எப்போதும் போல இஸ்லாமிய மக்கள் அயோத்தியில் உள்ள பாபர் மசூதியில் வழிபாடு நடத்தி வந்தனர்.

Ayodhya case

1949 ஆம் ஆண்டு பாபர் மசூதிக்குள், அத்துமீறி நுழைந்த இந்து அமைப்பினர், ராமர் சிலையை வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்ட நிலையில், மசூதியை மூடி மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. 

1950 ஆம் ஆண்டு, வழக்கான வழிபாட்டிற்காக பாபர் மசூதி திறக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

1961 ஆம் ஆண்டு, சன்னி வக்பு வாரிய அமைப்பினர், இந்து அமைப்பினர் வாதத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர்.

1986 ஆம் ஆண்டு, பாபர் மசூதி திறக்கவும், இந்து மக்கள் வழிபாடு நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதற்காக, பாபர் மசூதி செயல்பாட்டுக்குழு ஏற்படுத்தப்பட்டது.

1989 ஆம் ஆண்டு, பாபர் மசூதி தொடர்பான அனைத்து வழக்குகளும், உத்தரப் பிரதேச உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது, திரிலோக் நாத் பாண்டே என்பவர், தான் ராமரின் நெருங்கிய நண்பர் என்றுகூறி, இந்த வழக்கில் தானாக வந்து இணைந்து கொண்டார்.

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் துதி, யாரும் எதிர்பார்க்காத நிலையில், பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

1993 ஆம் ஆண்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிபிஐ, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 19 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இது, இந்து அமைப்பினருக்கு மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

2001 ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 13 பேர் மீதான குற்றப்பிரிவுகள் நீக்கப்பட்டன.

2003 ஆம் ஆண்டு, பாபர் மசூதி இருந்த இடத்தை ஆய்வு செய்ய தொல்லியல்துறை அமைக்கப்பட்டது. அதன்படி, அங்கு பாபர் மசூதியின் கீழ் கோயிலிருந்ததற்கான ஆதாரங்கள் இருந்ததாக இருப்பதாகத் தெரிவித்தது. 

2010 ஆம் ஆண்டு, செப்டம்பர் 30 ஆம் தேதி, உத்தரப் பிரதேச உயர்நீதிமன்ற 3 நீதிபதிகள் அமர்வு, பாபர் மசூதி வழக்கில் முதல் முறையாகத் தீர்ப்பு வழங்கியது. அதன்படி,  சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பங்காகப் பிரித்து, அதில் 2 பகுதிகளை இந்து அமைப்புகளிடமும், ஒரு பகுதியை இஸ்லாமிய அமைப்பினரிடமும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

Ayodhya case

2011 ஆம் ஆண்டு, இந்த தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரித்து, 3 தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனால், இந்த தீர்ப்புக்கு அந்த ஆண்டு மே மாதம், உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

2016 ஆம் ஆண்டு, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி புதிதாக மனுத் தாக்கல் செய்தார்.

2017 ஆம் ஆண்டு, மார்ச் 21 ஆம் தேதி, சுப்பிரமணியன்சுவாமியின் மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் அமர்வு, நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் பேச அறிவுறுத்தியது. ஆனால், இதையும் யாரும் ஏற்கவில்லை.

2019 ஆம் ஆண்டு, ஜனவரி 8 ஆம் தேதி உச்சநீதிமன்றம், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு,இந்த 
வழக்கிற்காக அமைக்கப்பட்டது. 

2019 ஆம் ஆண்டு, ஜனவரி 10 ஆம் தேதி இந்த வழக்கிலிருந்து நீதிபதி லலித் விலகிக்கொண்டார். 

2019 ஆம் ஆண்டு, ஜனவரி 25 ஆம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், அசோக் பூஷன், எஸ்.ஏ. பாப்டே, சந்திரசவுட், எஸ்.ஏ. நஷீர் ஆகியோர் கொண்ட புதிய அமர்வு அமைக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு, மார்ச் 8 ஆம் தேதி, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர் குழு ஒன்றை உச்சநீதிமன்றம் அமைத்தது. 2019 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல், நாள் தோறும் இந்த வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. 

2019 ஆம் ஆண்டு, அக்டோபர் 15 ஆம் தேதி, இந்த  வழக்கின் விசாரணையை அக்டோபர் 16 ஆம் தேதியுடன் நிறைவு செய்ய விரும்புவதாக, தலைமை நீதிபதி 
குறிப்பிட்டார். 

Ayodhya case

2019 ஆம் ஆண்டு, அக்டோபர் 16 ஆம் தேதி, இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றது. அப்போது, தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டு, நவம்பர் 9 ஆம் தேதி, இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.