தினமும் 80 கொலைகள் 91 பாலியல் பலாத்கார குற்றங்கள்! இந்தியாவின் அவலம்..
By Aruvi | Galatta | 03:39 PM
இந்தியாவில் தினந்தோறும் 80 கொலைகள் 91 பாலியல் பலாத்கார குற்றங்கள் நடைபெறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற குற்ற விபரங்கள் பற்றிய புள்ளி விவரங்களை, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் சுமார் 33 ஆயிரம் பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பெண்களுக்கு எதிராக 3 லட்சத்து 78 ஆயிரம் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த 2017 ஆம் ஆண்டை காட்டிலும், சுமார் 19 ஆயிரம் வழக்குகள் தற்போது அதிகரித்துள்ளது.
குழந்தைகள் கடத்தல் தொடர்பாக ஒரு லட்சத்து 5 ஆயிரம் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதுவும், கடந்த 2017 ஆம் ஆண்டை விட, 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கடந்த 2018-ம் ஆண்டில் மொத்தம் 50 லட்சத்து 74 ஆயிரம் கொடுஞ்செயல் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வகையான குற்றம், கடந்த 2017 ஆம் ஆண்டில், 50 லட்சத்து 7 ஆயிரம் குற்ற வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அதிகரித்துள்ளது.
மேலும், 29 ஆயிரம் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2017 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, 1.3 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதில், பெரும்பாலான கொலைகள் பழிக்குப்பழி வாங்குதல், சொத்து தகராறு மற்றும் ஆதாயத்தைக் கருதும் நோக்கத்துடன் அரங்கேற்றுவதற்காக நடந்துள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.