பொங்கல் நிதி உதவி திட்டத்தில் 25% கூடுதல் வழங்க மாற்றுத்திறனாளிகள் சங்கம் வழக்கு..
By Abinaya | Galatta | Dec 31, 2020, 12:12 pm
மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் நிதி உதவி திட்டத்தில் 25%அளவு கூடுதல் தொகை வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் பொதுநலன் வழக்கு தொடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் தாக்கல் செய்துள்ள மனு விபரம்,
’’ மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான கருத்தியல் ரீதியான புரிதல் மாறி வரும் காலம் இது. ஐக்கிய நாடுகள் சபை 2007 ஆம் ஆண்டு இயற்றிய ஊனமுற்றோர் உலக கன்வென்ஷன் விதிகளை இந்திய அரசு ஏற்றுள்ளதுடன், அந்த உடன்படிக்கைக்கு இணங்க மாற்றுத்திறனாளிகள் சட்டம் 2016-ஐ மத்திய அரசு இயற்றியுள்ளது.
எனினும், இச்சட்டத்தின் பல்வேறு சரத்துக்கள் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. இச்சட்டத்தின்படியான உரிமைகளை உறுதிப்படுத்தவும், ஊக்குவிக்கவும் விழிப்புணர்வு இயக்கங்களை அரசுகள் மேற்கொள்ள வேண்டுமென பிரிவு-39 வலியுறுத்துகிறது. இச்சட்டத்தின் தொகுதி-5, சமூகநலத்திட்டங்கள் குறித்து பேசுகிறது. மாற்றுத்திறனாளிகளை சமூகத்தில் சுயமாக வாழ வைக்கவும், பாதுகாக்கவும் உரிய திட்டங்களை அரசுகள் உருவாக்க வேண்டுமென சட்டப் பிரிவு-24(1) வலியுறுத்துவகிறது. இப்படிப்பட்ட திட்டங்களில், மற்றவர்களுக்கு வழங்கும் அளவைவிட மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 25% கூடுதல் அளவு வழங்க இச்சட்ட சரத்து மேலும் வலியுறுத்துகிறது.
பணிக்கு செல்லும் பெண்கள் இரு சக்கர வாகனங்கள் வாங்கிக்கொள்ள “அம்மா இருசக்கர வாகன“ திட்டத்தை 2018ல் அமல்படுத்தியபோது, மேற்கண்ட சட்டப்பிரிவை தமிழக அரசு முதலில் அமல்படுத்தவில்லை. எமது சங்கம் தொடுத்த வழக்கில், உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவிற்கு பின்னர்தான் மாற்றுத்திறன் பெண்களுக்கு 25% கூடுதல் மானியத்தொகை வழங்க அரசாணை பிறப்பித்தது.
2019 பொங்கல் பண்டிகையை கொண்டாடிட, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்குவதாக அரசு அறிவித்தபோது, இதே கோரிக்கைக்காக தொடுத்த வழக்கில் எமது சங்கத்தின் மனுவை பரிசீலிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இது திட்டம் அல்ல பரிசு என விளக்கம் அளித்து அரசு நிராகரித்தது. இப்படி ஒரு விளக்கத்தை சொல்லி அரசு நிராகரித்தது என்பது, இச்சட்ட சரத்தின் நோக்கத்திற்கு எதிரானதாகும்.
மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களைவிட மிகவும் கூடுதலான செலவுகளை ஒவ்வொரு நாள் வாழ்க்கை தேவைக்காகவும் செய்ய வேண்டியுள்ளதையும், இந்த செலவுகளை மற்ற சாதாரண நபர்களின் செலவுகளோடு ஒப்பிட முடியாது என்பதையும் இச்சட்டப்பிரிவு 21 கூறியுள்ளதை சட்டம் இயற்றுபவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
2021 பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்க உணவு மற்றும் கூட்டுறவுத்துறை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களுக்கு சட்டப் பிரிவு-24(1)ன்படி கூடுதல் தொகை வழங்க உத்தரவிடக்கோரி எமது சங்கம் மனு அனுப்பியது. ஆனால், அதற்கு எந்த பதிலும் அரசு வழங்கவில்லை. எனவே, பொங்கல் நிதி உதவி திட்டத்தில் 25%அளவு கூடுதல் தொகை மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களுக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அனிதா சுமந்த அடங்கிய அமர்வில் இந்த மனு புதன் கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஜன - 5 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உணவு மற்றும் கூட்டுறவு துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டனர்.