கொடைக்கானலுக்கு முக கவசம் அணியாமல் வந்த நடிகை அதிதி பாலனுக்கு அபராதம்!
By Aruvi | Galatta | Oct 18, 2020, 12:11 pm
கொடைக்கானலுக்கு முகக்கவசம் அணியாமல் வந்த “அருவி” பட நாயகியான நடிகை அதிதி பாலனிடம் அதிகாரிகள் அபராதம் வசூலித்ததால் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது வைரஸ் தாக்கம் சற்று குறைந்த காணப்படுவதாகல் ஊரடங்கில் பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் இணைய வகுப்புகள் மட்டும் நடத்தப்படுவதால், பலரும் சுற்றுலா தளங்களுக்குப் படையெடுக்க ஆரம்பித்து உள்ளனர்.
அதன்படி, தமிழ் நாட்டின் முக்கிய சுற்றுலா தளமாகத் திகழும் மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் அதிக அளவிலான எண்ணிக்கையில் நாளுக்கு நாள் தொடர்ந்து அங்கு அதிகரித்து வருகின்றனர்.
அதே நேரத்தில், கொடைக்கானலுக்கு முறையான அனுமதி பெறாமல் வரும் பயணிகளை கண்காணிக்கும் விதமாக, கொடைக்கானலில் பல விதமான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் முக கவசம் அணியாமல் வருவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து
சுகாதாரத்துறை அதிகாரிகள் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்தித் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். சோதனையில் முறையாக அனைத்து விதிகளும் பின்பற்றப்படுகிறது என்பதை உறுதி செய்த பிறகே, அந்த பயணிகள் கொடைக்கானலுக்கு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மாறாக விதிமுறைகளைப் பின்பற்றாத பயணிகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.
அதன்படி, கொடைக்கானல் நுழைவு வாயிலின் முன்பு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அங்குள்ள ரிச்சாலை வழியாக கொடைக்கானலுக்கு வந்த ஒரு காரை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், இருந்த 2 பேர் முக கவசம் அணியாமல் இருந்தது தெரிய வந்தது. அவர்களில் ஒருவர் பிரபல நடிகையான “அருவி” பட நாயகி அதிதி பாலன் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து முக கவசம் அணியாத நடிகை அதிதி பாலன் உள்பட 2 பேருக்கும் அங்கிருந்த அதிகாரிகள் தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதனை ஏற்க மறுத்த நடிகை அதிதி பாலனும், அவருடன் வந்தவரும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும், அதற்கு அதிகாரிகள் தரப்பில், அரசு சட்ட விதிப்படி தான் அபராதம் விதிக்கப்படுகிறது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
அத்துடன், அதிகாரிகள் அபராதம் வசூலிக்காமல் விடுவதாகவும் இல்லை என்பதிலும் உறுதியாக இருந்தனர். இதனையடுத்து, வேறு வழியின்றி நடிகை அதிதி பாலனும், அவருடன் வந்தவரும் தலா 200 ரூபாய் அபராதத்தைக் கட்டினர். அதன் பிறகே அவர்கள் இருவரும் கொடைக்கானலுக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை திருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலுக்கு முக கவசம் அணியாமல் வந்த புதுமண தம்பதிகளுக்கு அபராதம் விதித்ததுடன் அவர்களுக்கு முக கவசங்களும் வழங்கப்பட்டது. அதே போல், கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் முக கவசம் அணியாமல் வந்த நபரை நிறுத்திய ஆயுதப்படை பிரிவு போலீசார் காசிராஜா, சாதி பெயரைக் கேட்டதாகக் கூறப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.