ஆந்திராவில் போலீஸ் கஸ்டடியில் இருந்த இளைஞரை பெல்ட்டால் அடித்தும், அவரது தலைமுடி மற்றும் மீசையை மழித்தும் போலீசார் வெறித்தனமாக செயல்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கடந்த பல ஆண்டுகளாகவே, காவல் நிலையத்தில் நடைபெறும் சட்ட விரோத செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாகத் தான் தற்போது ஆந்திராவில் உள்ள ஒரு காவல் நிலையத்திலும் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளது அனைத்து தரப்பு மக்களிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வேதுல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆன வரபிரசாத், பட்டியலினத்தைச் சேர்ந்தவர் ஆவர்.
வரபிரசாத் வசிக்கும் வீடு உள்ள பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இறப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இதனால், அந்த கிராமத்தினர் துக்கம் அனுசரித்து வந்தனர்.
இதன் காரணமாக, அந்த தெருவில் வந்த வாகனங்களை மாற்றுப் பாதையில் செல்லுமாறு வரபிரசாத் மற்றும் அவருடன் இன்னும் 2 பேர் சேர்ந்து ஈடுபட்டு இருந்தனர்.
அந்த நேரத்தில் அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரிரைய வரபிரசாத் உள்ளிட்ட துக்க வீட்டில் இருந்த 3 பேரும் மாற்றுப் பாதையில் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். ஆனால், அந்த லாரி ஓட்டுநர் இந்த வழியாகத்தான் செல்வேன் என்று அடம் பிடிக்கவே, துக்க சடங்குகள் முடியும் வரை சிறிது நேரம் காத்திருக்கும் படி, அவரிடம் கூறி உள்ளனர்.
இதனையடுத்து, அடுத்த சிறிது நேரத்தில் அங்கு வந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு நிர்வாகி, மணல் லாரியை நிறுத்தியது தொடர்பாக வரபிரசாத் உள்ளிட்ட 3 பேரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு, அடுத்த சிறுது நேரத்தில், சடங்குகள் முடிந்து உடல் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அந்த லாரியும் அங்கிருந்து சென்றுவிட்டது.
ஆனால், அடுத்த நாள் காலையில், உள்ளூர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்காரர் ஒருவரை எதிர்த்துப் பேசியதாகக் கூறி, வரபிரசாத் உள்ளிட்ட 3 பேரையும், அதே பகுதியில் உள்ள சீதனகரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் என 2 பேர் வீடு தேடி வந்து, விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.
காவல் நிலையம் சென்றதும், விசாரணை என்ற பெயரில், வரபிரசாத் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கடுமையாகத் தாக்கி உள்ளனர். அதற்கு, வரபிரசாத் ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டது தான் தாமதம். அடுத்த கனமே அவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
குறிப்பாக, அந்த போலீசார் இருவரும் இந்த 3 பேரையும் பெல்டால் அடித்தும், கால்களால் எட்டி உதைத்தும் கடுமையாகத் துன்புறுத்தி உள்ளனர். முக்கியமாக, அதிகார துஷ்பிரயோகத்தின் உச்ச பட்சமாக முடி வெட்டுபவரைக் காவல் நிலையம் வரச்சொல்லி, வரபிரசாத்தின் தலைமுடி, மீசை மற்றும் தாடியை மழித்து
விட்டுள்ளனர்.
மீசை, தாடியை மழித்த பிறகும், அவர்களை போலீசார் இன்னும் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், வரபிரசாத் அங்கேயே மயங்கியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து, அவர் அங்குள்ள ராஜமுந்திரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விவகாரம் ஆந்திரா முழுவதும் பரவிய நிலையில், ஆந்திராவில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இது சம்பவம் தொடர்பாக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அத்துடன், பட்டியலின அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.
இதனையடுத்து, காவல் நிலையத்தில் பட்டியலின இளைஞர் ஒருவரை பெல்டால் அடித்து, தலைமுடியை மழித்த குற்றச்சாட்டில் ஈடுபட்ட இரண்டு காவலர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அந்த இரண்டு காவலர்களும், எப்போதும் போலவே, மிகக் கடுமையான தண்டனைகள் எதுவும் இல்லாமல் வழக்கம் போல் பணியிடை நீக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், சாத்தான்குளம் லாக்கப் டெத் விவகாரம் மிகப் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 10 போலீசார் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அதற்குள், ஆந்திரால், அதிகார துஷ்பிரயோகம் செய்யும் விதமாக, போலீசார் 2 பேர், விசாரணை கைதிகளைக் கடுமையாகத் தாக்கி தலைமுடி, தாடி, மீசையை மழித்த சம்பவம், ஆந்திராவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.