நலம்பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமித் ஷா!

நலம்பெற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் அமித் ஷா! - Daily news

2014 நாடாளுமன்ற தேர்தலில் உத்திரபிரதேசம், உத்திரகாண்ட், குஜராத் போன்ற மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி இமாலய வெற்றி பெறுவதற்காக சிறப்பாக செயல்பட்டதாக வெகுவாக பாராட்டப்பட்டவர் பா.ஜ.க தலைவர் அமித்ஷா. 

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நம்பகமான நண்பராகவும், 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ள இவர், குஜராத்தின் முதலமைச்சராக மோடி பதவியேற்ற காலத்தில் அம்மாநிலத்தில் பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் இருந்தார். வளமான வர்த்தக பேரரசை சொந்தமான வைத்துள்ள அமித்ஷா, அகமதாபாத்தில் உள்ள கல்லூரியில் படிக்கும் போது ஆர்.எஸ்.எஸ். தன்னார்வலர் ஆனார். ஆர்.எஸ்.எஸ்ஸில் இருந்ததால் 1982 ல் மோடியை சந்தித்த அமித் ஷா, தனது அரசியல் வாழ்க்கையை ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பு தலைவராக துவக்கி 1986 ல் பா.ஜ.க வில் சேர்ந்தார். அக்கட்சியின் உயர்பதவியை அடையும் வகையில் சிறப்பாக பணியாற்றிய அமித்ஷா, அரசியல் அரங்கில் பிரதமருக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது உள்துறை அமைச்சராக இருந்து வரும் அமி்த் ஷாவுக்கு, கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதியாகியிருந்தது. அதைத்தொடர்ந்து, அவர் குர்கோவன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையி்ல் சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சைக்குப் பிறகு, அவருக்கு மீண்டும் கொரோனாவுக்கான பரிசோதனைகள் செய்யப்பட்டபோது, ரிசல்ட் நெகடிவ் என வந்தது. அதைத்தொடர்ந்து, அவர் கொரோனாவிலிருந்து குணமடைந்து விட்டதாக மருத்துவமனை அறிக்கை தரவே, அமித்ஷா வீட்டுக்குத் திரும்பினார்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி அடுத்த சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளப்போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அமித் ஷா ட்வி்ட்டரில் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் `கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக' (Post Covid Care) என்று கூறி, ஆகஸ்ட் 18 -ம் தேதி அதிகாலை 2 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ஊடகப்பிரிவு தலைவர் மருத்துவர் ஆர்த்தி விஜி வெளியிட்டிருந்த அறிக்கையில், ``கடந்த சில நாட்களாக உள்துறை அமைச்சர் அமித் ஷா உடல்வலி மற்றும் உடல்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கெனவே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அது நெகட்டிவ்வாக வந்துள்ளது. இருப்பினும் கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நல்ல உடல்நிலையில் அமித் ஷா இருக்கிறார், மருத்துவமனையில் இருந்தபடியே தன்னுடைய அலுவல் பணிகளை அவர் கவனித்து வருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது

கடந்த சில மாதங்களாகவே, ``கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு, அதற்கு பின்னரும் ஒருசில அறிகுறிகள் தெரியவரலாம். அவை கொரோனாவாக இல்லாவிட்டாலும், கொரோனா ஏற்பட்டுவிட்டு சென்ற பிறகு ஏற்படும் நீட்சி" என மருத்துவர்கள் பொதுவெளியில் கூறி வந்தனர். அப்படியான் ஒரு பாதிப்புதான் இன்று அமித்ஷாவுக்கும் ஏற்பட்டிருக்கும் என கணிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய தினம் மருத்துவமனை சனிக்கிழமை (ஆக். 29) வெளியிட்ட அறிக்கையில், ‘அமித் ஷா பூரண குணமடைந்ததாா். அவா் விரைவில் வீடு திரும்புவாா்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, இன்றைய தினம் (ஆக.31), மருத்துவமனையில் இருந்து அமித்ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அமித்ஷா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது  பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் அவர்ன் நலன் விரும்பிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment