வெளியானது, அரியர் மாணவர்களின் தேர்ச்சிக்கு எதிராக அண்ணா பல்கலைகழகத்தின் ஏ.ஐ.சி.டி.இ கடிதம்!
By Nivetha | Galatta | Sep 08, 2020, 02:09 pm
நடப்பு 2019-20-ம் கல்வியாண்டின் இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்தும், கல்லூரிகள் திறப்பு எப்போது என்பது குறித்தும் ஏற்கனவே ஆலோசித்து அதற்கேற்ப அட்டவணை வெளியிடப்பட்டது.
அதன் பின்னரும் தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று நீடிப்பதால், இதுகுறித்து மேலும் ஆலோசித்து முடிவு எடுத்துப் பரிந்துரை அளிக்கப் பல்கலைக்கழக மானியக்குழு சார்பில் அரியானா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குகாத் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு அளித்துள்ள பரிந்துரையில், ‘இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து’ செய்ய வேண்டும் என்றும், அதில் ஈடுபாடு காட்டாத மாணவர்களுக்கு கொரோனா பரவல் முடிந்ததும் தேர்வு நடத்தலாம் என்றும் கூறியுள்ளது. அதேபோல், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை அக்டோபர் மாதம் திறக்கவும் அந்தக்குழு பரிந்துரைத்துள்ளது.
பொறியியல் படிப்பு, பொறியியல் கல்லூரிகளுக்கு தலைமையாக கருதப்படுகின்ற ஏ.ஐ.சி.டி.ஐ. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஒரு கடிதம் எழுதியிருக்கின்றது. அதில் தமிழக அரசு எடுத்துள்ள அனைவரும் தேர்ச்சி என்ற முடிவை ஏற்க இயலாது என்று தெரிவித்துள்ளது.
மேலும் முதல் மூன்று ஆண்டு பயிலக்கூடிய மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் தேர்ச்சி அறிவித்தீர்கள் என அக்கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பொறியியல் மாணவர்களை இப்படி ஒரு முடிவில் தேர்ச்சியடைய செய்தது ஏற்க இயலாது என்பது கடிதத்தில் உள்ள முக்கிய அம்சமாகும். இந்த நிலையில் பல்கலைக்கழக தரப்பும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் விதியை மீறினால் எதிர்காலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கான அங்கீகாரம் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர் கல்வித்துறை அதிகாரிகள் அப்போது பேசும்போது, ``பல்கலைக்கழக இறுதியாண்டு இறுதி செமஸ்டர் தேர்வை ரத்துசெய்வது குறித்து இன்னும் எந்தமுடிவும் எடுக்கப்படவில்லை. ஆனால் ஆரம்பக்கட்ட ஆலோசனையைத் தொடங்கிவிட்டோம். இதில் முடிவெடுக்க கவர்னர், முதல்-அமைச்சரிடம் அனுமதி வாங்கவேண்டும். அவர்கள் என்ன சொல்கிறார்களோ? அதனடிப்படையில் தான் முடிவெடுக்கப்படும். சிலநேரங்களில் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைக்கும் முடிவுகளை அப்படியே நாம் கையாளுவதும் இல்லை. சிலநேரங்களில் தளர்வும், சிலநேரங்களில் அதனை ஏற்றும் முடிவுசெய்கிறோம். எனவே தேர்வு ரத்துசெய்யப்படுவது குறித்து முடிவுகளை எடுத்து அறிவிப்பதற்குக் காலதாமதம் ஆகும்" என்று கூறியிருந்தார்
அதன்பின் உயர் கல்வியில் இறுதிப் பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப் பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்கள் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, மாணவர்கள் தரப்பிலிருந்து அவருக்கு தொடர்ச்சியாக பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வந்தது.
ஆனால், அரியர் மாணவர்களின் தேர்ச்சி செல்லாது என்ற AICTE மின்னஞ்சல் குறித்து விளக்கம் அளித்துள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, AICTE மின்னஞ்சல் விவகாரம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அரியர் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கும் என்று சூரப்பா கூறியுள்ளார். அடுத்தகட்டமாக தமிழக அரசு இந்த விவகாரத்தில் எந்த முடிவு எடுக்கப்போகிறது என்பது ஆலோசனைக்கு பிறகு தெரியவரும் என்று உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
``அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்திருந்த அனைத்து பொறியியல் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை" என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தியிருந்தாலே அவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், அதுபோன்ற எந்த எதிர்ப்பும் ஏஐசிடிஇ தெரிவிக்கவில்லை என்றும், அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து எனக்கு மின்னஞ்சல் எதுவும் வரவில்லை என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியுள்ளார்