2 வது தலைநகரம் மதுரையா? திருச்சியா? அதிமுகவிற்குள் அமைச்சர்கள் முட்டல் மோதல்..
By Aruvi | Galatta | Aug 19, 2020, 02:09 pm
தமிழகத்தின் 2 வது தலைநகரம் மதுரையா? திருச்சியா? என்று அதிமுகவிற்குள் அமைச்சர்கள் முட்டல் மோதல் சண்டை தொடங்கி உள்ளதால், அந்த கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், “மதுரை மாநகரம் பாரம்பரியம் மிக்க ஒரு பழமையான நகரம் என்றும், இந்த நகருக்கு தென்னவன், ஆலவாய், கூடல், கன்னிபுரீசம், சிவநகரம், சிவராஜதானி, கோவில் மாநகரம், கடம்பவனம், நான்மாடக்கூடல் என்று அழைக்கப்படும் நகரமாக புகழ் பெற்றுள்ளதாக” கூறினார்.
“மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில், திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருமலைநாயக்கர் மகால், தெப்பக்குளம் , ராணிமங்கம்மா சத்திரம், காந்தி மியூசியம் உள்ளதாகவும், ஆண்டு தோறும் சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது என்றும், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது என்றும், உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் தான் நடைபெறுகிறது” என்றும், தெரிவித்தார்.
“வற்றாத நதியாக இங்கு வைகை நதி இருந்து கொண்டிருக்கிறது. நமது மதுரையின் பாரம்பரியம் ஏறத்தாழ 2500க்கும் மேற்பட்டது” என்றும், புகழ் பாடினார். மேலும், “மதுரையின் வீதிப் பெயர்களுக்கும் கூட பல வரலாறுகள் உண்டு” என்றும், குறிப்பிட்டார்.
அத்துடன், “கடந்த 4 ஆண்டுகளில் மதுரை மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை முதல்வரும், துணை முதல்வரும் தந்து இருக்கிறார்கள் என்றும், மதுரையில் பலகோடி ரூபாய் மதிப்பில் வைகை இரு புறமும் நான்கு வழிச்சாலை, கோரிப்பாளையத்தில் மேம்பாலம், பெரியார் பேருந்து நிலையம் அருகே மேம்பாலம் வர உள்ளது என்றும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது என்றும், ஏற்கனவே மதுரை உயர் நீதிமன்றக் கிளை இருக்கிறது” என்றும் பெருமையோடு நினைவு கூர்ந்தார்.
இதனால், “இந்த சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் காலம் வந்துவிட்டது என்றும், கடந்த 4 ஆண்டுக் கால அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் வாரி வழங்கப்பட்டு உள்ளதாகவும், தென் மாவட்ட மக்களின் நியாயமான நீண்ட நாள் கனவு திட்டமான 'சென்னைக்கு அடுத்து மதுரையை தமிழ்நாட்டில் 2 வது தலைநகரமாகக் கொண்டு வர வேண்டும்' ” என்றும், வலியுறுத்தினார்.
“சென்னையில் ஒரு கோடி மக்கள் தொகை இருப்பதால், போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டிருக்கிறது என்றும், தொழில் முதலீடுகளும் வந்துள்ளன என்றும், மதுரையை 2 வது தலைநகரமாக மாறினால் தலைநகர் அந்தஸ்து கிடைக்கும் என்றும், குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் செல்லூர் ராஜூவும் மதுரையை 2 வது தலைநகராக்கும் கோரிக்கையை முன் வைத்தார்.
இந்நிலையில், திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், “திருச்சியை தமிழகத்தின் 2 வது தலைநகராக அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
“திருச்சியை 2 வது தலைநகராக்கும் எம்.ஜி.ஆரின் கனவுத் திட்டத்தைச் செயல் படுத்த வலியுறுத்துவோம் என்றும், இது தொடர்பாக முதலமைச்சர், துணை முதலமைச்சரிடம் மன்றாடி திருச்சியை 2 வது தலைநகராக்க முயற்சி எடுப்போம்” என்றும், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உறுதிப்படத் தெரிவித்தார்.
முன்னதாக, “திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்காவிடில் போராட்டம் அறிவிக்கப்படும்” என, திருச்சி மாவட்ட வியாபாரி கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாகச் சற்று முன் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “மதுரையை 2 வது தலைநகரமாக்க விரும்புவது தென் மாவட்ட அமைச்சர்களின் கோரிக்கை” என்று, குறிப்பிட்டார்.
மேலும், “2 வது தலைநகர் கோரிக்கை குறித்து முதல்வர் முடிவெடுக்கும் வரை, எங்களுக்கு எந்த நிலைப்பாடும் கிடையாது என்றும், அதனை முதலமைச்சர் முடிவு செய்வார்” என்றும், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
இப்படி, அதிமுகவிற்குள் அமைச்சர்கள் தங்கள் விருப்படி தமிழகத்தின் 2 வது தலைநகர் குறித்துப் பேசி வருவது, அக்கட்சியில் மீண்டும் சலசலப்பையும், முட்டல் மோதலையும் வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.