அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!
By Aruvi | Galatta | Mar 15, 2021, 09:24 am
அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்ன என்பதனை தற்போது பார்க்கலாம்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையடுத்து, தேர்தல் கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு போன்ற பல்வேறு பணிகளில் கவனம் செலுத்தி வந்த நிலையில், ஒவ்வொரு கட்சியாக தங்களது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தான், அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து தேர்தல் அறிக்கையை கூட்டாக வெளியிட்டு உள்ளனர். ஏற்கெனவே, தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும் என்றும், வருடத்துக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்“ என்றும், கூறியிருந்தார். அந்த திட்டங்கள் உட்பட பல்வேறு முக்கிய திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
அதன் படி,
- அனைவருக்கும் வீடு வழங்கும் அம்மா வீடு திட்டத்தை அறிவிக்கப்பட்டுள்ளது.
- நகரப் பேருந்துகளில் மகளிருக்கு 50 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படும்
- மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்:
- வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி
- விலையில்லா கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படும்
- ஆண்டு முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு 2ஜி டேட்டா இலவசம்
- அனைவருக்கும் அம்மா வாஷிங் மெஷின் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும்
- அரசு பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பு காலம் 1 வருடமாக உயர்த்தப்படும்.
- மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்டப்படும்.
- சாதிவாரி கணக்கெடுப்பின்படி அனைத்து சாதிகளுக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படும்
- மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கிடப்படும்
- பொங்கல் பண்டிகைக்காக உதவித்தொகை திட்டம் தொடரும்
- ஏழை திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை வழங்கப்படும்
- வேலை இல்லாத இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை இரட்டிப்பாக்கப்படும்
- ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்
- 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்படும்
- நெசவாளர்களுக்கு ஒரு லட்சம் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும்
- அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சோலார் சமையல் அடுப்பு வழங்கப்படும்
- மாவட்டந்தோறும் மினி ஐ.டி பார்க் நிறுவப்படும்: அதிமுக தேர்தல் அறிக்கை
- ஏழை, எளிய மக்களுக்கு வட்டியில்லா கடனுதவி
- தமிழ் கட்டாய பாடமாக்கப்படும்
- குலவிளக்கு திட்டத்தின் கீழ் 1500 ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
- இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை
- நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும்.
- அமைப்பு சாரா ஓட்டுநர்களுக்கு விபத்து காப்பீடு வழங்கப்படும்
- காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
- நெசவாளர்களுக்கு 1 லட்சம் வரை கடன் தள்ளுபடி
- 100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்
- பத்திரிகையாளர்களுக்கு குடியிருப்பு மனைகள், மற்றும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும்.
- 25 ஆயிரம் மானியத்தில் எம்.ஜி.ஆர் பசுமை ஆட்டோ வழங்கப்படும்
- ஆண் வாரிசுகளால் புறக்கணிக்கப்பட்ட முதியோருக்கான உதவித்தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
- கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து சாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
- அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை கடன் வழங்கப்படும்.
உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் அதில் இடம் பெற்று உள்ளன.