நடிகர் விஜய் மேல் முறையீடு வழக்கு.. தீர்ப்பு நகலின்றி மனு ஏற்பு.. அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!
சொகுசு கார் வரிவிலக்கு தொடர்பான நடிகர் விஜய் மேல் முறையீடு வழக்கில், தீர்ப்பு நகலின்றி மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது.
நடிகர் விஜய், தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சுங்கவரி செலுத்திய நிலையில், நுழைவு வரி வசூலிக்கத் தடை கோரியிருந்த விஜய்யின் மனு மீதான விசாரணையின் போது, நீதிபதி எம்.எஸ் சுப்ரமணியம் கூறிய கருத்துகள் தான், தற்போது கடந்த வாரம் ஹாட் டாப்பிக்கா மாறிப்போனது.
அதாவது, கடந்த 2012 ஆம் ஆண்டு, இங்கிலாந்திலிருந்து வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு இறக்குமதி வரியாக 1,88,11,045 ரூபாயை நடிகர் விஜய் செலுத்தியிருந்தார். ஆனால், சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்வதற்குச் சென்ற போது, நுழைவு வரியைத் தமிழ்நாடு வணிக வரித்துறையில் செலுத்தி ஆட்சேபனை இல்லா சான்று வாங்கிவர நடிகர் விஜய்க்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதே நேரத்தில், கேரளா மற்றும் தமிழ்நாடு உயர் நீதிமன்றங்கள் நுழைவு வரி செலுத்த வேண்டியதில்லை என உத்தரவிட்டு உள்ளதாகக் கூறி நடிகர் விஜய் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
“இந்த நுழைவு வரி செலுத்த வேண்டியதில்லை என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதால், வரியைச் செலுத்த வேண்டும்” என வணிகவரித்துறை உத்தரவிட்டது.
இதனையடுத்து, நடிகர் விஜய் வணிக வரித்துறையின் இந்த உத்தரவை எதிர்த்துக் கடந்த 2012 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில், “20 சதவீதம் நுழைவுவரி செலுத்திவிட்டு, வாகனத்தைப் பதிவுசெய்ய இடைக்கால உத்தரவு 2012 ஜூலை 17 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது என்றும், அதன் படி கடந்த 2012 ஜூலை 23 ஆம் தேதி 20 சதவீத வரியை செலுத்திய விஜய், வாகனத்தைப் பதிவு செய்து பயன்படுத்தி வருகிறார்” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், “சொகுசு காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கில் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார் நீதிபதி.
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த நடிகர் விஜய், இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
மேலும், இந்த வழக்கில், “அபராதம் விதித்து நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் அளித்த தீர்ப்பின் நகல் இல்லாததால், விஜய்யின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை” என்றும், கூறப்பட்டது.
இந்த நிலையில், “தனி நீதிபதியின் தீர்ப்பின் நகல் இல்லாமல் வழக்கை பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிடக்கோரி” நடிகர் விஜய் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த கூடுதல் மனு, நீதிபதிகள் எம். துரைசாமி, ஆர். ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “தீர்ப்பு நகலின்றி விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையும்” ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இச்சூழலில், இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், “வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களை சமர்பிக்குமாறு” கூறி, விசாரணையை ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.