“தனி நீதிபதியின் கருத்துகளை நீக்கி.. அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்” நடிகர் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகத் தகவல்..
“ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பான வழக்கின் தீர்ப்பில், தன் மீதான தனி நீதிபதியின் கருத்துகளை நீக்கக்கோரியும், அபராதத்தை ரத்த செய்ய வேண்டும்” என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் மேல்முறையீடு செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளன.
தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு சுங்கவரி செலுத்திய நிலையில், நுழைவு வரி வசூலிக்கத் தடை கோரியிருந்த நடிகர் விஜய்யின் மனு மீதான விசாரணையின் போது, நீதிபதி எம்.எஸ் சுப்ரமணியம் கூறிய கருத்துகள் தான், தற்போது தமிழ்நாட்டில் புதிய ஹாட் டாப்பிக்கா மாறியிருக்கிறது.
அதாவது, கடந்த 2012 ஆம் ஆண்டு, இங்கிலாந்திலிருந்து வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு இறக்குமதி வரியாக 1,88,11,045 ரூபாயை நடிகர் விஜய் செலுத்தியிருந்தார்.
ஆனால், சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்வதற்குச் சென்ற போது, நுழைவு வரியைத் தமிழ்நாடு வணிக வரித்துறையில் செலுத்தி ஆட்சேபனை இல்லா சான்று வாங்கிவர நடிகர் விஜய்க்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதே நேரத்தில், கேரளா மற்றும் தமிழ்நாடு உயர் நீதிமன்றங்கள் நுழைவு வரி செலுத்த வேண்டியதில்லை என உத்தரவிட்டு உள்ளதாகக் கூறி நடிகர் விஜய் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
அதே சமயத்தில், “இந்த நுழைவு வரி செலுத்த வேண்டியதில்லை என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதால், வரியைச் செலுத்த வேண்டும்” என வணிகவரித்துறை உத்தரவிட்டது.
இதனால், நடிகர் விஜய் வணிக வரித்துறையின் இந்த உத்தரவை எதிர்த்துக் கடந்த 2012 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த வழக்கில், “20 சதவீதம் நுழைவுவரி செலுத்திவிட்டு, வாகனத்தைப் பதிவுசெய்ய இடைக்கால உத்தரவு 2012 ஜூலை 17 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது என்றும், அதன் படி கடந்த 2012 ஜூலை 23 ஆம் தேதி 20 சதவீத வரியை செலுத்திய விஜய், வாகனத்தைப் பதிவு செய்து பயன்படுத்தி வருகிறார்” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டது.
இத்தனை ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கு, தற்போது நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, நடிகர் விஜய் 2 வாரங்களில் வரி செலுத்த வேண்டும் என்றும், வழக்கு தொடர்ந்ததற்காக ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து, அதை முதல்வரின் நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் செலுத்த வேண்டும்” என்றும், அதிரடியாக உத்தரவிட்டார்.
மேலும், நீதிபதியின் உத்தரவில், “சமூக நீதிக்காக பாடுபடுவதாக சினிமாவில் பிரதிபலிக்கும் நடிகர்கள், வரி விலக்கு கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இல்லாமல், ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும்” என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
அத்துடன், “வரி என்பது நன்கொடையல்ல, அது கட்டாய பங்களிப்பு” உள்ளிட்ட சில கருத்துக்களை முன் வைத்து நடிகர் விஜயை சற்று காட்டமாகச் சாடியிருந்தார்.
நீதிபதியின் இந்த கருத்து, தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது இணையத்தில் பேசும் பொருளாகவும் மாறியது.
அதன் தொடர்ச்சியாக, “விஜய் ரீல் ஹீரோவா? ரியல் ஹீரோவா? என்பதெல்லாம் நீதிபதிக்குத் தேவையில்லாதது என்றும், இந்த விவகாரத்தில் சமூக நீதியெல்லாம் எங்கு வந்தது” என்றும், முன்னாள் நீதிபதி சந்துரு சரமாரியாகக் கேள்வி எழுப்பி நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார்.
இவர்களுடன், நடிகர் விஜய்க்கு ஆதரவாகச் சீமான், கார்த்தி சிதம்பரம், ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் தான், “தன்னுடைய காருக்கு வாகன நுழைவு வரி பாக்கியைச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும், அதே சமயம் தன்னை பற்றித் தீர்ப்பில் பதிவு செய்த விமர்சனங்களை நீக்கக்கோரியும், தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக்கோரியும்” நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.