ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளையும், ஊழல்களையும் அடையாளம் கண்டு அவற்றை களைந்திட, கறுப்பு ஆடுகளை களையெடுக்க உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வரிடம் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் & மாநில தலைவர், சு.ஆ.பொன்னுசாமி "கொள்ளைக்கு மேல் கொள்ளையடிப்பதில் சாதனை படைக்கும் ஆவின் நிர்வாகம். தடுத்து நிறுத்தி ஆவினை காப்பாற்றுவாரா தமிழக முதல்வர்?" என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வி எழுப்புள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், 

``தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிர்வாகம் கொரானா நோய் தொற்று பேரிடர் காலமான தற்போது நாளொன்றுக்கு சுமார் 40லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைத்திருப்பதாகவும், இந்த கொரோனா பேரிடர் காலத்தில் ஆவின் நிறுவனம்  28% வளர்ச்சியோடு இந்தியாவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளதாகவும், விரைவில் முதலிடத்தைப் பிடித்து விடுவோம் என அறிக்கை விட்டு தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜேந்திர பாலாஜி அவர்கள் போல் திரு. வள்ளலார் ஐஏஎஸ் அவர்களும் தன் பங்கிற்கு டைனோசரை விழுங்க முயற்சி செய்திருக்கிறார்.

ஏனெனில் பால் கொள்முதல் மற்றும் விற்பனையில் குஜராத்தின் அமுல் நிறுவனம் முதலிடத்திலும், கர்நாடகாவின் நந்தினி பால் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் அதுவும் பால் விற்பனையில் நாளொன்றுக்கு அறுபது இலட்சம் லிட்டரும், தயிர் விற்பனையில் நாளொன்றுக்கு ஐந்து இலட்சம் லிட்டரும் என்று வெண்மைப்புரட்சியில் புரட்சி செய்துள்ளது என்பதே உண்மை. மகாராஷ்டிரா உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் போது விற்பனையில் வெறும் 25 லட்சம் லிட்டர் என்கிற இலக்கை நீண்ட காலமாக தாண்டாமல் இருக்கும் ஆவின் நிறுவனம் தினசரி 40லட்சம் லிட்டர் பாலினை கொள்முதல் செய்து விட்டு அதனை வளர்ச்சியாக மெச்சிக் கொள்வது சுய தம்பட்டம் மட்டுமல்ல ஆவினில் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கும் ஊழல்களையும், முறைகேடுகளையும் மறைக்கும் முயற்சியாகும்.

ஏனெனில் தமிழகத்தில் 25 ஆவின் மாவட்ட ஒன்றியங்களில் உள்ள சுமார் 85000க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில் சுமார் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால், அவர்கள் உற்பத்தி செய்து தரும் பாலினை மட்டுமே ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்ய வேண்டும். பால் பற்றாக்குறை காலங்களில் கூட கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய உறுப்பினர்கள்   சேர்க்கப்பட்டு அவர்களிடம் இருந்து தான் பாலினை கொள்முதல் செய்வது வழக்கம். கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் மட்டுமே தனியாரிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்படும். (பால் ஊற்றும் உற்பத்தியாளர்கள் எண்ணிக்கை நான்கரை இலட்சம் என்று சொல்லப்படும்.
மேற்கு மாவட்டங்கள் தவிர, பிற மாவட்டங்களில் பால் ஊற்றுபவர்கள் பெயரில் பால் வரவு வைக்காமல் சங்க நிர்வாகிகள் உறவினர்கள் பெயரில் மட்டும் வரவு வைக்கும் கொடுமை ஒரு தனிக்கதை.)

ஆனால் தற்போது ஊரடங்கு ஐந்தாவது மாதமாக அமுலில் இருக்கும் சூழலில் நுகர்வோர் பயன்பாட்டில் ஆவின் பால் விற்பனை என்பது அபாரமாக ஒன்றும் உயரவில்லை. அதே நேரம் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கும் பால் உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலினையே கொள்முதல் செய்ய மறுத்து வருவதால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட ஆவின் ஒன்றியங்களில் இன்றளவும் பால் உற்பத்தியாளர்கள் பாலினை சாலையில் கொட்டி போராடும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல், தர்மபுரி, மதுரை, வேலூர் மாவட்டங்களில் பால் கொள்முதல் விடுமுறை அறிவித்து பால் கொள்முதல் செய்யாத நிலையில் உற்பத்தியாளர்கள் பாலைக் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்வதுடன், பல மாவட்டங்களில் பால் பணப் பட்டுவாடா செய்யப்படாமல் பல நூறு கோடி நிலுவையில் வைத்துள்ளதே தற்போதைய ஆவின் நிர்வாக இயக்குனரின் இமாலயச் சாதனை.

ஆனால் ஆவின் நிர்வாக இயக்குனர் திரு. வள்ளலார் ஐஏஎஸ் அவர்கள் சொல்வது போன்று தினசரி 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பாலினை சாலையில் கொட்டி போராடும் நிலை ஏற்பட்டிருக்காது. அத்துடன் கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டிருப்பர்.

ஒவ்வொரு நிர்வாக இயக்குநர் பதவியேற்று ஒரு வருடத்துக்குள் தாங்கள் வந்த பின்னர் இலாபத்தில் இயங்குவதாக அறிவிப்பதும், பால் விற்பனை விலையை உயர்த்தும் போது, கடந்த பல ஆண்டுகளாக தொடர் நட்டத்தில் இயங்குவதால் பால் விற்பனை விலை தவிர்க்க முடியாத சூழலில் உள்ளதாக தெரிவிப்பதும் வாடிக்கையாக கண்டு வருகிறோம்.

உற்பத்தி செய்யப்படும் பாலில் எண்பது சதவிகிதம் பாலாக விற்பனை செய்யும் நிலையை ஏற்படுத்துவதே சிறந்த நிர்வாக இயக்குனருக்கு அழகு.

சென்னையில், ஊரடங்கு காரணமாக நாளொன்றுக்கு ஒன்றரை இலட்சம் லிட்டர் உயர்ந்தது என்பது பெருமைக்குரிய செயலன்று என்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

இதிலிருந்து ஆவின் நிர்வாகம் தரப்பில் கொள்முதல் செய்வதாக சொல்லப்படும் தகவல் பொய் என்பதும், கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடம் பாலினை கொள்முதல் செய்யாமல் தனியாரிடம் பால் கொள்முதல் செய்து ஆவினுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியிருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. 

ஆவின் இணையம், ஒன்றியங்களில் பணியிலிருந்து ஓய்வுப்பெற்றவர்களை, ஆலசோகர்கள் (Consultant) என்றப்பெயரில் நியமித்து நடக்கும் இமாலயத் தவறுகள் இன்றும் தொடர்கதையாகி தொடர்கிறது என்பதே நிதர்சனம்.

சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஆவின் பால் விற்பனை மற்றும் விநியோகத்தை அந்தந்த ஒன்றியங்களே முடிவு செய்து கொள்ளும் அதிகாரம் இருக்கும் போது அதை மீறி திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்த 6 மொத்த விநியோகஸ்தர்களை ரத்து செய்ய கணேசன் என்பவரிடம் கடந்த பிப்ரவரி 13ம் தேதி விண்ணப்பம் பெற்று அன்றைய தினமே மொத்த விநியோகஸ்தர்களை ரத்து செய்து விட்டு கணேசனுக்கு C/F ஏஜென்ட் உத்தரவு வழங்கி அரசின் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறார் வள்ளலார்.


அதுமட்டுமின்றி மாதவரம், அம்பத்தூர் பால் பண்ணை மற்றும் அம்பத்தூர் பால் பொருட்கள் தொழிற்சாலையில் பணியாற்றிய சுமார் 450க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்களின் வேலையை கடந்த வாரம் பறித்து, அந்த பணிகளை செய்திட தனக்கு வேண்டிய ரவி என்கிற பினாமி ஒப்பந்ததாரருக்கு (லேபர் காண்ட்ராக்ட்) 150ரூபாய் அதிகமாக சம்பளம் நிர்ணயம் செய்து அந்த ஒப்பந்தத்தை வழங்கி இந்த கொரோனா பேரிடர் காலத்தில் மிகப்பெரிய முறைகேட்டை செய்து வரலாற்று சாதனை மேல் சாதனையாக படைத்து வருகிறார்.

எனவே ஆவின் நிர்வாகத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகளையும், ஊழல்களையும் அடையாளம் கண்டு அவற்றை களைந்திட, கறுப்பு ஆடுகளை களையெடுக்க உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆவின் நிறுவனத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை" என்று கூறியிருக்கிறார்.