70 லட்சம் பேர் கர்ப்பமடைவார்கள்! - ஐ.நா
By Aruvi | Galatta | Apr 30, 2020, 04:40 pm
ஊரடங்கு காரணமாக உலகம் முழுவதும் 70 லட்சம் பேர் கர்ப்பமடைவார்கள் என்று ஐ.நா. சபை அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவ்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி, கொரோனா வைரஸ் பரவி உள்ள நாடுகள் எல்லாம், பொது ஊரடங்கைப் பிறப்பித்து, சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே, ஊரடங்கு காரணமாக கணவன் - மனைவி இருவரும், அதிக நேரங்கள் மற்றும் அதிக நாட்கள் வீட்டிலேயே இருக்கும் சூழல் உருவாவதால், காதல் ரொமன்ஸ் அதிகரிக்கும் என்று கடந்த நாட்களில் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், கொரோனாவின் ஊரடங்கு காலத்தில், பெண்களின் நலனையும், உரிமையையும் பாதுகாக்காவிட்டால், அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்த்த ஐ.நா. மக்கள்தொகை நிதியம் அமைப்பு, ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, “கொரோனா பாதிப்பு காரணமாக, ஊரடங்கு கட்டுப்பாடுகளால், கருத்தடை சாதனங்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும்” என்று எச்சரித்துள்ளது.
மேலும், “இப்படி ஏற்படும் கடும் தட்டுப்பாட்டால், உலகம் முழுவதும் சுமார் 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும்” என்றும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
“குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட 114 நாடுகளில், சுமார் 45 கோடி பெண்கள் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதாகக் கூறியுள்ள ஐ.நா.சபை, கருத்தடை சாதனங்களின் தட்டுப்பாடு காரணமாக, 4 கோடியே 70 லட்சம் பெண்களுக்குக் கருத்தடை சாதனங்கள் கிடைக்காத நிலை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது.
“இதன் காரணமாக, அடுத்து வரக்கூடிய மாதங்களில், 70 லட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும்” என்றும், ஐ.நா. ஆய்வு அறிக்கை கூறியுள்ளது.
அதேபோல், “ஆண்களும் - பெண்களும் அதிக நேரம் வீட்டிலேயே இருப்பதால், குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகம் நடைபெற வாய்ப்புள்ளது என்றும், அடுத்த 6 மாதங்களில், 3.10 கோடி குடும்ப வன்முறை சம்பவங்கள் நடைபெறலாம்” என்றும் ஐ.நா.சபை கணித்துள்ளது.
குறிப்பாக, “ஊரடங்கு காலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும், குழந்தை திருமணங்கள் அதிகரிக்கப் பொருளாதார சூழல் முக்கிய காரணமாக இருக்கும் என்றும், ஐநா ஆய்வு எச்சரித்துள்ளது.
இதனால், இவற்றைக் கருத்தில்கொண்டு, வரும் காலங்களில் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும், பெண்களை உரிமைகளை பாதுகாக்கவும், உலகநாடுகள் அனைத்தும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஐ.நா.சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.