ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது கிடையாது-மத்திய அரசு திட்டவட்டம்
By Madhalai Aron | Galatta | Oct 15, 2020, 06:30 pm
மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மேலும் காலம் தேவைப்படுவதாக மத்திய அரசு கூறி உள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாவதால் இட ஒதுக்கீடு வழங்கும்பட்சத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசு கூறியது. மத்திய அரசின் இந்த முடிவு மனுதாரர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவைத் தொடர்ந்து மனுதாரர்கள் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு என்பது அரசின் கொள்கை முடிவு என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளிகளுக்கு 2 ஆண்டுகளுக்கான தொடர் அங்கீகாரம் வழங்கும் நிகழ்ச்சி காட்பாடி சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று (அக். 14) நடைபெற்றது. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தலைமை வகித்தார். வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 4 மாவட்டங்களைச் சேர்ந்த 275 தனியார் பள்ளிகளுக்கு 2 ஆண்டுகளுக்கான தொடர் அங்கீகாரத்தை பள்ளி தாளாளர்களிடம் வழங்கி பேசியதாவது:
"தமிழத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளை பாதுகாக்கும் அரசாக தமிழக அரசு விளங்கி வருகிறது. அரசுப்பள்ளிகளில் 15 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. தனியார் பள்ளிகளில் 3 லட்சம் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
நீட் தேர்வில் கேட்கப்பட்ட 180 கேள்விகளில் 174 கேள்விகள் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளாகும். தமிழக பாடத்திட்டங்களை பார்த்து நாடே வியக்கிறது. தமிழகத்தில் 18 தொலைக்காட்சி சேனல்களில் கல்வி நிகழ்ச்சி ஒளிப்பரப்பப்படுகிறது. ஆடிட்டிங் (CA) படிக்க ஆயிரம் மாணவர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 7,600 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது".
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:
"தமிழகத்தில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைவருக்கும் கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்காக கடந்த ஆண்டு ரூ.303 கோடி செலவிடப்பட்டது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ரூ.934 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கூடுதலாக ஒரு கல்வி மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, குடியாத்தம் பகுதியை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்கப்படும். இது தொடர்பாக முதல்வரிடம் கலந்து பேசி முடிவு அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு என்பது தற்போதைக்கு சாத்தியம் இல்லை. ஆந்திராவில் பள்ளிகளை திறந்ததால் 26 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இங்கும் அதுபோல நடைபெறக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்த உடன், பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை ஆகியவை கலந்து ஆலோசித்து முதல்வர் மூலம் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும்.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவாகும். இதற்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத 40 வயது என்பது அனைவரும் ஆலோசித்து எடுத்த முடிவாகும். எனவே, இதை பரிசீலினை செய்ய வாய்ப்பில்லை".
இவ்வாறு அவர் கூறினார்.