36 வேற்றுகிரகவாசிகள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சி! - SPL Article
By Aruvi | Galatta | Jun 17, 2020, 02:21 pm
36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள் நமது பூமியை தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வேற்று கிரகவாசிகள் நிஜமாலுமே இருக்கிறார்களா? இல்லையா என்ற கேள்வி பல ஆங்கில சினிமாக்களைப் பார்க்கும் போது, நமக்கு எழாமல் இல்லை. சிறுவயது முதலே பலருக்கும் அந்த கேள்விகள் மனதில் எழுந்திருக்கும்.
அப்படியான வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு, விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்றே பதில் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக நாட்டிங்ஹாம் பல்கலைக்கழம் “நமது பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில், மற்ற கிரகங்களின் நிலை குறித்து” ஆராய்ச்சி மேற்கொண்டது. இதில், பல்வேறு வியப்பூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி, “வேற்றுகிரகவாசிகள் தகவல் தொடர்பு சமிக்ஞைகளை உலகம் முழுவதும் அனுப்பக்கூடும்” என்பது தெரிய வந்துள்ளது. அத்துடன், “நமது விண்மீன் மண்டலத்தில் 36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள் தகவல்தொடர்பான சமிக்ஞைகளை அனுப்பி உள்ளதாகவும்” தெரியவந்துள்ளது.
எனினும், கால நிலை மற்றும் தூரம் காரணமாக, அவை முன் எப்போதோ இருந்தனவா அல்லது தற்போது இருக்கின்றனவா என்பதை அறிய முடியவில்லை.
அதேபோல், தி ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னலில் வெளியிடப்பட்ட நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் ஆய்வின் அறிக்கையில், “இந்த ஆய்வின் முந்தைய கணக்கீடுகள் டிரேக் சமன்பாட்டை அடிப்படையாகக் கொண்டவை என்றும், இது 1961ல் வானியலாளரும் வானியற்பியலாளருமான பிராங்க் டிரேக்கால் எழுதப்பட்ட சமன்பாடு” என்றும் கூறியுள்ளது.
மேலும், “விண்மீன் வேர்றுகிரக வாழ்க்கையில் பலவீனமான மற்றும் வலுவான வரம்புகளை ஏற்படுத்தவே” ஆய்வாளர்கள் ஆஸ்ட்ரோபயாலஜிகல் கோப்பர்நிக்கன் கோட்பாடுகளை உருவாக்கினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பூமியைபோல ஒரு கிரகம் என்றால், அங்கு உயிர்கள் வாழக்கூடிய மண்டலமானது; ஒரு நட்சத்திரத்திலிருந்து சரியான தூரம், மிகவும் சூடாகவோ அல்லது குளிராகவோ இருக்காது என்றும், அங்கு நீர் இருந்தால் உயிர் வாழ்க்கை கிரகத்தின் மேற்பரப்பில் சாத்தியமாகலாம்” என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக, “பூமியைப் போலவே ஒரு கிரகத்தில் உயிர்களின் வாழ்க்கை 4.5 முதல் 5.5 பில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் உருவாக வேண்டும் என்றும், அதே நேரத்தில் ஒரு கிரகம் வாழ்க்கையை உருவாக்கக் குறைந்தபட்சம் 4 பில்லியன் ஆண்டுகள் ஆகும் என்றும், ஆனால் அதற்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் உருவாகலாம்” என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
அந்த சமிக்ஞைகளை ஆராயும்போது, “சாத்தியமான வேற்றுகிரக நாகரிகங்களுக்கிடையிலான சராசரி தூரம் சுமார் 17,000 ஒளி ஆண்டுகளுக்குச் சமமாக இருக்கும்” என்று ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
அதேபோல், “வேற்றுகிரக நாகரிகங்களின் சமிக்ஞைகளைப் பெறுவதற்கான தொழில்நுட்ப அடிப்படையில் நாம் இன்னும் முன்னேறவில்லை” என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
“இந்த வேற்றுகிரகவாசி வாழ்க்கைக்கான தேடல் 7,000 ஒளி ஆண்டுகளுக்குள் எதையும் வெளிப்படுத்தவில்லை என்றால், இந்த நாகரிகங்களின் ஆயுட்காலம் 2,000 ஆண்டுகளுக்கும் குறைவானது என்றும் அல்லது பூமியில் உள்ள வாழ்க்கை தனித்துவமானது மற்றும் ஆய்வில் நிறுவப்பட்ட ஆஸ்ட்ரோபயாலஜிகல் கோப்பர்நிக்கன் வரம்புகளை விட மிகவும் சீரற்ற செயல்பாட்டில் நிகழ்கிறது என்றும், இந்த 2 விஷயங்களில் ஏதோ ஒன்றை மட்டுமே அது குறிக்கிறது” என்றும், ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பாக ஆய்வு நடத்திய நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் பேராசிரியர் கிறிஸ்டோபர் கான்செலிஸ் கூறும்போது, “எங்கள் புதிய ஆராய்ச்சி, வேற்று கிரக அறிவார்ந்த நாகரிகங்களுக்கான தேடல்கள் வாழ்க்கை எவ்வாறு உருவாகிறது என்பதை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நம்முடைய சொந்த மனித நாகரிகம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதற்கான தடயங்களையும் தருகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“அடிப்படையில், புத்திசாலித்தனமான வாழ்க்கை பூமியில் உள்ளதைப் போன்றே பிற பூமி போன்ற கிரகங்களில் உருவாகும் என்ற அனுமானத்தை நாங்கள் செய்தோம் என்றும், இதனால் சில பில்லியன் ஆண்டுகளுக்குள் வாழ்க்கை தானாகவே பரிணாம வளர்ச்சியின் இயல்பான பகுதியாக உருவாகும்” என்றும் நம்பிக்கைத் தெரிவித்தனர்.
மேலும், “ஒரு நட்சத்திரத்தின் வாழக்கூடிய மண்டலத்தில் எந்த கிரகங்களின் எந்த பகுதி உயிரை உருவாக்கும்? உள்ளிட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பது கடினம் என்றும், ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அத்துடன், “பூமியில் புத்திசாலித்தனமான வாழ்க்கையைப்போல் கேலக்ஸியில் வேறு எங்காவது புத்திசாலித்தனமான வாழ்க்கை அதே வழியில் உருவாகும் என்றும், அவை சிக்னல்கள் வழியாக தங்கள் இருப்பை ஒருவிதத்தில் தெரியப்படுத்துகின்றன” என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால், விண்மீன் மண்டலத்தில் அறிவார்ந்த வேற்றுகிரகவாசிகள் இருப்பது கிட்டதட்ட உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.