குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ கூடுதல் அரிசி! அரசாணை
By Aruvi | Galatta | Apr 28, 2020, 10:05 am
தமிழகத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
இதனால், பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் அன்றாட உணவுக்கே பணம் இன்றி, மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மக்கள் உணவின்றி தவிக்கும் காட்சிகளை ஊடகங்கள் படமாக்கி, செய்திகளாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இவற்றைக் கவனத்தில்கொண்ட தமிழக அரசு, குடும்ப அட்டைகளில் பெயர் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று கூறி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசியுடன் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களுக்கு அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் தலா 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, “நான்கு உறுப்பினர்கள் கொண்ட குடுப்பத்திற்கு ஏற்கனவே வழங்கப்படும் 20 கிலோ அரிசியுடன், நான்கு நபர்களுக்கு தலா 5 கிலோ வீதம் 20 கிலோ கூடுதல் அரிசி வழங்கப்படும்” என்றும் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம், “மொத்தமாக அந்த குடும்ப அட்டைக்கு நாற்பது கிலோ அரிசி வழங்கப்படும் என்றும்” தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்கான கூடுதல் அரிசியை மே மற்றும் ஜுன் மாதங்களில் அனைவரும் பெற்றுக் கொள்ளலாம்” என்றும் தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.