கொரோனா பாதிப்பு எதிரொலியாக 20 ஆயிரம் ரயில் பெட்டிகள் தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை, இன்னும் சில நாட்களில் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

20 thousand train compartments converted to special Corona wards

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மருத்துவமனைகளில் இட பற்றக்குறை ஏற்படும் என்றும் கூறப்பட்டு வந்தது.

இதே போல் ஒரு சூழல் சீனாவில் வந்தபோது, அங்கு ஒரு வார காலத்திற்குள் சுமார் ஆயிரம் பேர் தங்கி சிகிச்சை பெறும் வகையில் புதிய மருத்துவமனை ஒன்று கட்டி முடிக்கப்பட்டது.

இதனைக் கருத்தில்கொண்ட மத்திய அரசு, இந்தியாவின் சில நட்சத்திர விடுதிகளை தற்காலிகமாக மருத்துவமனைகளாக மாற்றி உள்ளன. 

அதன் தொடர்ச்சியாக, கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்க ஏதுவாக இந்தியா முழுவதும் சுமார் 20 ஆயிரம் ரயில் பெட்டிகளைத் தனிமை வார்டுகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதன்படி, 20 ஆயிரம் ரயில்களின் பெட்டிகளும் தற்போது, தனிமை வார்டாக மாற்றப்பட்டு வருகின்றன. அதன்படி, இந்த 20 ஆயிரம் ரயில் பெட்டிகளிலும் சுமார் பல லட்சம் பேர் தங்கி சிகிச்சை பெற முடியும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்காக, குளிர்சாதன வசதியில்லாத படுக்கை வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், ரயில் பெட்டியில் உள்ள கழிவறைகள் எல்லாம் தற்போது குளியலறைகளாக மாற்றப்பட்டு வருவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.