சென்னையில் இன்று முதல் 200 பேருந்துகள்!
By Aruvi | Galatta | May 18, 2020, 01:00 pm
சென்னையில் இன்று முதல் 200 பேருந்துகள் இயங்கும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, இன்று முதல் 4 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் பழைய நடைமுறையே தொடரும் நிலையில், திருச்சி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் பல விசயங்களுக்குத் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படத் துவங்கியுள்ளன.காலை முதல் அரசு அலுவலர்கள், 54 நாட்களுக்குப் பிறகு, இன்று அலுவலகம் திரும்பினர்.
இதனிடையே, அரசு அலுவலர்கள் பணிக்கு வந்து செல்வதற்கு வசதி செய்து தரும் வகையில், சென்னையில் இன்று முதல் 200 பேருந்துகள் இயங்கும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
பேருந்துகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்படும் என்றும், தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மேலும், மாநில அரசின் வழிகாட்டுதல் படி தொழில்நிறுவனங்கங்களும் இயங்கத் தொடங்கி உள்ளன. அலுவலக வாகனங்கள், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து ஊழியர்களை அழைத்துச் செல்கின்றன.
இதன் காரணமாக, சென்னை அண்ணா சாலை, கிண்டி, ராஜிவ் காந்தி சாலைகளில் கடந்த 54 நாட்களுக்குப் பிறகு தற்போது போக்குவரத்து செயல்படத் தொடங்கி உள்ளன.